For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அரசியலுக்குத் தயாராகிறேன் – மக்களையும் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்: விஜய்

  By Staff
  |

  Vijay
  சென்னை: "மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அவர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி போராடுவேன். என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும், என்னை நம்பி என் வழியை பின்பற்றும் என் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்..." என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

  மேலும், அரசியலுக்கு, தன்னை தயார்படுத்தி வருவதாகவும், மக்கள் விரும்பும்போது, களத்தில் இறங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

  மலையாளத்தில் வெளிவந்த பாடிகார்ட் என்ற படம் தமிழில் தயாராகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். சித்திக் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகில் உள்ள திருவிடைமருதூரில் சில தினங்களுக்கு முன் தொடங்கியது.

  அதைத்தொடர்ந்து விஜய்-அசின் பங்குபெற்ற போட்டி நடனக்காட்சி, காரைக்குடியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள செம்மண் பூமியில் படமாக்கப்பட்டது.

  படப்பிடிப்பு இடைவேளையில் விஜய், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு விஜய் அளித்த பதில்களும்:

  சுறா எப்போது வரும்?

  இம்மாத இறுதியில் வெளிவருகிறது.

  மீண்டும் அசினுடன் நடிப்பது பற்றி...

  நானும் அசினும் இதற்கு முன் இணைந்து நடித்த சிவகாசி, போக்கிரி இரண்டுமே பெரும் வெற்றி பெற்றவை. இந்த முறையும் ரசிகர்களுக்கு பெரும் விருந்து காத்திருக்கிறது.

  உங்கள் மக்கள் இயக்கம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?

  மக்கள் இயக்கம் தொடங்கியதே தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நற்பணிகள் செய்வதற்குத்தான். வீதிதோறும் இறங்கி வேலை செய்ய ரசிகர்களுக்கு ஒரு அடையாள அட்டை தேவைப்பட்டது. கம்ப்யூட்டர்கள் வழங்குதல், ஏழைகளுக்கு இலவச திருமணம் என்று பல்வேறு பணிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

  இத்தகைய நற்பணிகளை விளம்பரப்படுத்தவோ, வெளிச்சப்படுத்தவோ நான் விரும்பாததால், அது ஒரு மவுன புரட்சியாக நாளுக்கு நாள் வேகத்துடன் நடந்து வருகிறது. மாதம் ஒருமுறை மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்து கொண்டுதான் இருக்கிறேன். கடந்த மாதம் கூட திருச்சியில் 24 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தேன்.

  உங்கள் இயக்கத்துக்கு எந்த மாதிரியான இளைஞர்களை எதிர்பார்க்கிறீர்கள்?

  "உண்மையான உணர்வுள்ள நூறு இளைஞர்கள் என்னுடன் வாருங்கள். இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன்'' என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அந்த பேச்சின் வலிமை, தன்னம்பிக்கை எனக்கு பிடித்த விஷயம். அதே பாணியில்தான் உண்மையான உணர்வுள்ள, சமூக அக்கறை கொண்ட துடிப்பான இளைஞர்களை என் மக்கள் இயக்கத்துக்கு எதிர்பார்க்கிறேன்.

  நீங்கள் அரசியலுக்கு வருவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் உங்களை நம்பி வந்த ரசிகர்களை ஏமாற்றி விடுவீர்களோ என்ற அச்சம் உள்ளதே?

  நான் எந்த பணியில் ஈடுபட்டாலும் நூறு சதவீதம் முழுமையாக ஈடுபடுவேன். எல்லாவற்றுக்கும் காலமும், சூழலும் முக்கியம் இல்லையா? அரசியல், ஆரவாரமான அலைகள் வீசும் பெருங்கடல். அதில் நீந்தி கரை சேர வேண்டும் என்றால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு என்னை நான் தயார்படுத்தி வருகிறேன். அதற்கான அரசியல் பாடம் பயின்று என் இயக்கத்தினரையும் தயார்படுத்தி வருகிறேன். எப்போதும் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அதை பலப்படுத்துவதில்தான் என் முழு கவனமும் உள்ளது.

  விஜய் அரசியலுக்கு வந்தால், நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்பும்போது, கண்டிப்பாக களத்தில் இறங்கி களப்பணி ஆற்றுவேன். நான் ஒரு முடிவெடுத்தால், அந்த முடிவை நான் நினைச்சாக்கூட மாத்திக்க மாட்டேன். இது, சினிமா வசனம் மட்டுமல்ல. நிஜமும் அப்படித்தான்.

  நடிகனாக வேண்டும் என்று முடிவெடுத்து அதில் உறுதியாக இருந்ததால்தான் இன்று உங்கள் முன்னாள் நிற்கிறேன்.

  மக்களுக்கு பிரச்சினை என்றால் குரல் கொடுப்பதுடன், மக்களுக்காக முன்னின்று போராடவும் தயங்கமாட்டேன் என்று முன்பு கூறினீர்களே?

  அதில் எந்தவித மாற்றமும் இல்லை. என்னை உயரத்தில் உட்காரவைத்து அழகு பார்த்த அருமை மக்களுக்காக, போராட எப்போதும் நான் தயார்நிலையில் இருக்கிறேன்.

  என்னை ஒரு சகோதரனாக, மாணவ சமுதாயத்தினர் ஒரு சக மாணவனாக, பெரியோர்-தாய்மார்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக, குடும்பத்தில் ஒருவனாக என்னை நேசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அவர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி போராடுவேன். மீண்டும் சொல்கிறேன், என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும், என்னை நம்பி என் வழியை பின்பற்றும் என் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்...,''என்றார் விஜய்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X