twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பார்த்திபன்-மதுமிதா லடாய்!

    By Staff
    |

    Madhumitha
    வல்லமை தாராயோ படத்தின் ஆடியோ வெளியீடு அதன் ஹீரோ பார்த்திபன் வராமலேயே நடந்து முடிந்திருக்கிறது. அழைப்பிதழில் தனது பெயர் போடாததால் விழாவுக்கு வராமல் புறக்கணித்து விட்டதாக பார்த்திபன் கூறியுள்ளார்.

    இயக்குநர் மதுமிதாவின் முதல் படம்தான் வல்லமை தாராயோ. பார்த்திபன், சாயா சிங் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தொடக்க விழாவின்போதுதான், சாமி சிலைகளுக்கு முன்பு குஷ்பு கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து அது சர்ச்சையாகி வழக்கு வரை போனது என்பது நினைவிருக்கலாம்.

    தற்போது படப்பிடிப்பு முடிந்து படத்தின் ஆடியோ வெளியாகியுள்ளது. இதற்கான விழா ராணி மெய்யம்மை ஹாலில் நடந்தது. பட விழா கிட்டத்தட்ட மதுமிதாவின் குடும்ப விழா போல காணப்பட்டது. மதுமிதாவின் தந்தை, தாயார், கணவர், மைத்துனர் என குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

    விழாவில் பார்த்திபன் கலந்து கொள்ளவில்லை. அவசர காரணத்திற்காக அவர் வரவில்லை என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அன்றைய தினம் பார்த்திபன் சென்னையில்தான் இருந்தார். அதுவும், திரைப்பட வர்த்தக சபையில் நடந்த ஐரோப்பிய பட விழாவில் கலந்து கொண்டு படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

    விழாவில் பார்த்திபன் கலந்து கொள்ளாததற்கு, அவருக்கும் தயாரிப்பாளருக்கும் (மதுமிதாவின் தாயார்தான் தயாரிப்பாளர்) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

    அழைப்பிதழில் பார்த்திபன் பெயர் போடப்படவில்லை. மேலும், விழா தொடர்பாக அவரிடம் முன்கூட்டியே ஆலோசிக்கவில்லையாம். இதனால்தான் பார்த்திபன் கோபித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பார்த்திபன் கூறுகையில், இயக்குநர் மதுமிதா, கெளதம் மேனனிடம் உதவியாளராக இருந்தார் என்று கூறித்தான் என்னிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதை நம்பித்தான் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

    ஆனால் பின்னர்தான் தெரிந்தது அவர், கெளதம் மேனனிடம் உதவியாளராக இல்லை என்பது. இருந்தாலும் ஒப்புக் கொண்டபடி நடிக்க முடிவு செய்தேன்.

    இப்படத்துக்காக வட பழனியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் ரூம் எடுத்து திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுத்தேன். ஆனால் படத்தின் டைட்டில் கார்டில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மதுமிதா என்று போட்டுக் கொண்டார்கள்.

    மதுமிதாவுக்கு இயக்குநராக எந்த அனுபவமும் இல்லாததால், படப்பிடிப்பின்போது பலரும் அவரை கிண்டல் செய்தனர். நான்தான் அவர்களிடம் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று தடுத்து படம் நல்லமுறையில் வளர ஒத்துழைத்தேன்.

    ஆனால் படத்தின் ஆரம்பத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், இறுதிக் கட்டத்தில் வழங்கப்படவில்லை. பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழில் எனது பெயர் இடம் பெறவில்லை.

    கல்யாணம் என்றால் தாய்மாமனுக்கு அழைப்பு இல்லாமல் எப்படி. அழைப்பிதழில் தாய்மாமன் பெயர் போடாவிட்டால் எப்படி. அந்த மாமன் எப்படி திருமணத்திற்கு வருவார்.

    படத்தின் நாயகனான எனது பெயர் அழைப்பிதழில் இடம் பெறாததால்தான் நான் விழாவுக்கு வரவில்லை. இதை முதலிலேயே சொன்னால் பட விழா பாதிக்கும் என்பதால்தான் நான் சொல்லவில்லை என்று கூறியுள்ளார் பார்த்திபன்.

    பார்த்திபனுக்கு மன அழுத்தம்-தயாரிப்பாளர்:

    ஆனால், பார்த்திபனின் புகாரை தயாரிப்பாளர் திரிசக்தி சுந்தரராமன் மறுத்துள்ளார்.

    அவர் கூறுகையில், படத்திற்கு பார்த்திபன் சிறந்த முறையில் ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் நல்ல நடிகர், நல்ல மனிதர். ஆனால் அவருடைய பெயரை அழைப்பிதழில் போடவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

    எங்களுக்கு இது முதல் படம். எனவே சூர்யாவின் காக்க காக்க உள்பட பல படங்களின் பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்களை சேகரித்து மாடல் பார்த்தோம். எல்லாவற்றிலும் நடிகர், நடிகைகள் பெயர் இடம் பெறவில்லை.

    அதே பாணியில் வல்லமை தாராயோ பட ஆடியோ அழைப்பிதழையும் தயாரித்தோம். அப்படியும் கூட பார்த்திபன், சாயா சிங்கின் ஸ்டில் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தது.

    விழா நடந்த மேடையில் பார்த்திபனின் படத்ைத வைத்திருந்தோம். என்ட்ரன்ஸிலும் அவரது டிஜிட்டல் பேனர் இருந்தது. எனவே நாங்கள் பார்த்திபனை இருட்டடிப்பு செய்யவில்லை.

    பார்த்திபனின் படத்துடன் 2,000 போஸ்டர்கள் ஒட்டியுள்ளோம். சென்னையில் ரூ.12 லட்சம் செலவில் 16 ஹோர்டிங் வைத்துள்ளோம். தாராபூர் டவரில் ரூ.2.25 லட்சம் செலவில் பெரிய விளம்பர போர்டு பார்த்திபன் படத்துடன் நிறுவியுள்ளோம். அவரது சொந்த படத்துக்குகூட இவ்வளவு விளம்பர பலகைகள் வைத்ததில்லை என்று அவற்றை தயார் செய்த நிறுவனத்தினர் கூறியுள்ளனர். பத்திரிகை விளம்பரங்களிலும் பார்த்திபன் படங்கள் தான்.

    மதுமிதா, கவுதம்மேனனின் பச்சைக்கிளி முத்துசரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். சரத்குமார், ராதிகா போன்றோருக்கு தெரியும். இதுதவிர நிறைய குறும்படங்கள் எடுத்து சிங்கப்பூர் அரசின் விருது பெற்றுள்ளார். திரைக்கதை வசனத்தை மதுமிதாதான் எழுதினார். அதில் தனது பாணி இருக்க வேண்டும் என்று உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தியை வைத்து பாலிஷ் செய்தார். அவ்வளவு தான்.

    பார்த்திபனுக்கு ஏதோ மன அழுத்தம் இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் இந்த கோபம் என்று நினைக்கிறேன் என்றார் அவர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X