»   »  குணால் கொலையா?

குணால் கொலையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kunal with Sonali
நடிகர் குணால் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரைக் கொன்று விட்டனர் என குணாலின் தந்தை ராஜேந்திர சிங் கூறியுள்ளார்.

குணால் சிங் என்கிற இயற் பெயர் கொண்ட நடிகர் குணால் சமீபத்தில் தனது மும்பை இல்லத்தில் மின்விசிறியில் பிணமாகத் தொங்கினார். அந்த சமயத்தில், அவரது வீட்டில் அவரது காதலியும், குணால் நடிக்கவிருந்த புதிய இந்திப் படத்தின் நாயகியுமான லவீனா மட்டுமே இருந்தார்.

தான் பாத்ரூம் சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது குணால் பிணமாக தொங்கியதாகவும் லவீனா போலீஸில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று குணாலின் தந்தை ராஜேந்திர சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் தனது மனைவி அனுராதா மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்தி வந்தான். உயிரிழந்த அன்று கூட தனது மனைவி, குழந்தைகளுடன் போனில் பேசியுள்ளான்.

எந்தவித மன வருத்தத்திலும் அவன் இல்லை. தற்கொலை செய்து கொள்வதற்கான எந்த சூழ்நிலையிலும் அவன் இல்லை. எனவே அவனை கொன்று விட்டனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜேந்திர சிங்.

இதையடுத்து லவீனா மீதான விசாரணையை போலீஸார் இறுக்கியுள்ளனர். லவீனாவின் வாக்குமூலத்தை போலீஸார் முழுமையாக ஏற்கவில்லை. தன்னை மணக்குமாறு லவீனா வற்புறுத்தியிருக்கலாம். அதற்கு குணால் மறுத்திருக்கலாம். இதனால் அவரை ஆள் வைத்துக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தற்போது விசாரணையை திருப்பியுள்ளனர்.

ராஜேந்திர சிங்கின் கூற்றுக்கு வலு சேர்ப்பது போல குணாலின் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் கூறியுள்ளது அமைந்துள்ளது.

லவீனா தவிர வேறு சிலரும் அந்த சமயத்தில் வீட்டில் இருந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் குணாலை அடித்துக் கொலை செய்து பின்னர் உடலை மின்விசிறியில் தொங்க விட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil