For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரஜினிக்கு விழுந்த 10!

  By Staff
  |

  Rajini and Shreya
  பெங்களூர் கோவிலுக்கு பிச்சைக்காரன் வேடத்தில் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, நிஜமான பிச்சைக்காரன் என நினைத்து, மார்வாடிப் பெண் ஒருவர் 10 ரூபாய் பிச்சை போட்டாராம். அதை ரஜினி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாராம்.

  டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதியுள்ள தி நேம் இஸ் ரஜினிகாந்த் நூலில்தான் இந்த சுவாரஸ்யத் தகவல் பதிவாகியுள்ளது.

  ஆசியாவின் நம்பர் 2 சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினி. ஜாக்கி சானுக்கு அடுத்து அதிகம் சம்பாதிப்பவர் ரஜினி. ஆனால் அவருக்கு பத்து ரூபாய் பிச்சையாக வந்தபோது, அவர் அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக மனதுக்குள் மாபெரும் தத்துவம் உதித்துள்ளது.

  அந்த சுவாரஸ்ய அனுபவத்தை காயத்ரியின் வார்த்தைகளிலேயே காண்போம் ..

  பணத்திற்குக் கணக்கே இல்லை என்ற போதிலும், சாதாரணமாக இருப்பதையும், எளிமையாக இருப்பதையும் விரும்புபவர் ரஜினிகாந்த். சமீபத்தில் சிவாஜி படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பின்னர் பெங்களூருக்குச் சென்றிருந்தார் ரஜினி.

  அங்கு தனது பால்ய நண்பர்களுடன் சந்தோஷமாக இருந்தார். அப்போது இளம் வயதில் தான் அடிக்கடி செல்லும் ஒரு கோவிலுக்குச் செல்ல விரும்பினார். பொதுவாக பொது இடங்களுக்கு செல்ல விரும்பினால், மாறுவேடத்தில்தான் செல்வார் ரஜினி.

  அதேபோல இந்த முறையும், பிச்சைக்காரர் வேடம் பூண்டார். செயற்கையான ஒரு பல் செட், முரட்டு கம்பளி, பழைய லுங்கி, சட்டை ஆகியவற்றுடன், கையில் கோல் ஏந்தி கோவிலுக்குப் போனார் ரஜினி.

  அவருடன் வந்த நண்பருக்கே ரஜினியை சரியாக அடையாளம் தெரியவில்லை. ஏன் இப்படி கோலம் என்று அவர் கேட்டபோது, நான் சுதந்திரப் பறவை, தங்கக் கூண்டில் வைத்து என்னை யாரும் அடைக்க முடியாது என்றாராம் ரஜினி.

  ரஜினியின் தோற்றத்தைப் பார்த்த கோவிலுக்கு வந்த ஒரு மார்வாடிப் பெண், அடடே என்று பரிதாபப்பட்டு ஒரு 10 ரூபாயை எடுத்து ரஜினியிடம் கொடுத்துள்ளார்.

  முதலில் ரஜினிக்குப் புரியவில்லை. பிறகுதான் இது தனது வேடத்திற்குக் கிடைத்த பரிசு என்று நினைத்து அந்த பத்து ரூபாயை வாங்கிக் கொண்டார்.

  பிறகு அப்படியே நடந்தார். ஆனால் அந்த மார்வாடிப் பெண்ணுக்கு ஏதோ பொறி தட்டியிருக்கும் போல. ரஜினியைப் பின் தொடர்ந்து வந்தார். இதை கவனிக்காத ரஜினி, தனது பையில் இருந்து 100 ரூபாயை எடுத்து உண்டியலில் போட்டார்.

  இதைப் பார்த்த அப்பெண்ணுக்கு குழப்பம். பார்க்க பிச்சைக்காரர் போல இருக்கிறார், நூறு ரூபாயை உண்டியலில் போடுகிறாரே என்று குழம்பினார். தொடர்ந்து அவரை பின் தொடர்ந்தார்.

  கோவிலை விட்டு வெளியே வந்த ரஜினி, காத்திருந்த காரில் ஏறப் போனார். அவ்வளவுதான் வேகமாக வந்து நின்ற மார்வாடிப் பெண், யார் நீங்கள் என்று கேட்க ரஜினியின் குட்டு வெளிப்பட்டது.

  பெரும் தர்மசங்கடமாகி விட்டதாம் அந்தப் பெண்ணுக்கு. மன்னித்துக் கொள்ளுங்கள், உங்களைத் தவறாக நினைத்து விட்டேன் என்று கூறிய அவர் பத்து ரூபாயைக் கொடுத்து விடுங்கள் என்று அன்போடு கேட்டுள்ளார்.

  ஆனால் ரஜினியோ அதைக் கொடுக்க மறுத்தார். அத்தோடு நில்லாமல், ஒவ்வொரு முறையும், நீ ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன்தான் என்று ஆண்டவன் எனக்கு உணர்த்தி வருகிறான். அவனுடைய நாடகத்தில் நீங்கள் ஒரு கருவி. கடவுளுக்கு முன்பு நாம் பூஜ்ஜியம் என்பதைதான் இது காட்டுகிறது என்று புன்னகையுடன் கூறியவாறு, அந்தப் பெண்ணுக்கு வணக்கம் சொல்லி விட்டு பத்து ரூபாயுடன் கிளம்பினாராம் ரஜினி.

  ரஜினியின் வாழ்க்கையில் எவ்வளவு சுவாரஸ்யங்கள்....

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X