twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பகிரங்க மன்னிப்பு கேட்டார் சல்மான்கான்!

    By Chakra
    |

    Salman Khan
    மும்பை: மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மிகுந்த சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட நடிகர் சல்மான்கான், இப்போது அதற்காக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். நாட்டையே உலுக்கிய இந்தத் தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

    இந்தத் தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் நடிகர் சல்மான்கான், பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில், "மும்பை தாக்குதலின்போது இரண்டு பெரிய ஓட்டல்கள் தாக்குதல்களுக்கு ஆளானதாலும், அதில் பணக்காரர்களும், செல்வாக்கான மனிதர்களும் இறந்ததாலும்தான் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விட்டது.

    இந்தத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசைக் குற்றம் சொல்லக் கூடாது. மும்பை தாக்குதல், பாதுகாப்பு துறையின் தோல்வியால்தான் நிகழ்ந்தது..." என்று கூறி அதிர வைத்தார்.

    மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதை சர்வதேச புலனாய்வு அமைப்புகளே ஆதாரப்பூர்வமாக கூறிவரும் நிலையில், சல்மானின் இந்தக் கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சல்மான் கருத்து பற்றி மராட்டிய முதல்வர் அசோக் சவான் கருத்து தெரிவிக்கையில், "மும்பை தாக்குதலில் ஏழை மக்களையும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் விட்டு வைக்கவில்லை என்பதை சல்மான் நினைவில் கொள்ள வேண்டும். ஏழை, பணக்காரன் என்ற ரீதியில் தீவிரவாத தாக்குதலை பிரித்துப் பார்க்கக்கூடாது. மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

    பா.ஜனதா - சிவசேனா கடும் எதிர்ப்பு:

    பாரதீய ஜனதா தலைவர் ஷா நவாஸ் உசேன் கூறும்போது, "சல்மான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிப்பதுடன் சல்மான் கான் நிறுத்திக்கொள்ள வேண்டும். தேசத்திடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

    சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் கூறுகையில், "சல்மான் கானின் கருத்துக்கள் துரதிர்ஷ்டவசமானவை. 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி நடந்த மும்பை தாக்குதல்கள், இந்தத் தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட போர். அவருடைய கருத்துக்காக சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும். தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்ற சி.எஸ்.டி. பகுதியில் அம்பானியோ, கேமா லைனில் டாடாவோ, பிர்லாவோ வசிக்க வில்லை. பாகிஸ்தானில் இந்திய சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் சானலுக்கு சல்மான்கான் எதற்காக பேட்டி கொடுக்க வேண்டும்?'' என்றார்.

    மும்பை தாக்குதல் வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வக்கீல் உஜ்வால் நிகமும், சல்மான் கானுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    தந்தை வருத்தம்..

    சல்மானின் பொறுப்பற்ற பேச்சு, நாடு முழுவதும் கிளப்பிய எதிர்ப்பைக் கண்ட அவரது தந்தை சலீம்கான், "சல்மானை பகிரங்க மன்னிப்பு கேட்க வைப்பதாக" அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து, நேற்று மாலை தனது பாகிஸ்தான் ஆதரவு கருத்துக்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார் சல்மான்கான். தனது ட்விட்டர் தளத்தில், "எல்லா உயிர்களும் சம மதிப்பு கொண்டவைதான். உலகின் எந்த இடத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தாலும் அது மன்னிக்க முடியாதது. தீவிரவாதத்துக்கும், தீவிரவாதிக்கும் குறிப்பிட்ட மதம், நாடு எதுவுமில்லை.

    விஐபிக்கள் தாக்கப்பட்டால் அது முக்கியத்துவம் பெறுகிறது. சாதாரண மக்கள் தாக்கப்படுவதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள் என்ற அர்த்தத்தில் நான் சொன்னதை, தங்களுக்கேற்ப அந்த சேனல் வெளியிட்டுவிட்டது.

    எனக்கு இந்த தேசத்தின் புலனாய்வு அமைப்புகள் மீதும், ராணுவத்தின் மீதும் பெரும் நம்பிக்கை உள்ளது. அவர்களைப் புண்படுத்தும் எண்ணத்தில் கருத்து கூறவில்லை. எனது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்..'' என கூறியுள்ளார் சல்மான்கான்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X