»   »  மம்மூட்டிக்கு அடியா?

மம்மூட்டிக்கு அடியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Mammootty with Nayanatara
மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தாக்கியதாக கேரளாவில் பரபரப்பு எழுந்துள்ளது. ஆனால் இதை மம்மூட்டி மறுத்துள்ளார்.

மம்மூட்டி நடித்துள்ள படம் ரெளத்ரம். இப்படம் சமீபத்தில் கேரளாவில் ரிலீஸானது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வசனம், முதல்வர் அச்சுதானந்தனை மறைமுகமாக தாக்குவது போல இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், அச்சுதானந்தனின் ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சமீபத்தில் கோட்டயத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டின்போது, அந்த நகரில் ஒட்டப்பட்டிருந்த படத்தின் போஸ்டர்களை கட்சியினர் கிழித்தெறிந்தனர்.

இந் நிலையில் கோழிக்கோட்டில் ரெளத்ரம் படம் தொடர்பான விழா நடந்தது. இதில் மம்மூட்டி கலந்து கொண்டார். விழா முடிந்து வெளியே வந்தபோது மம்மூட்டியை ரசிகர்கள் சூழ்ந்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு தொண்டர், மம்மூட்டியின் முகத்தில் ஓங்கிக் குத்தியதாக தெரிகிறது.

இந்த செய்தி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மம்மூட்டி இதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதெல்லாம் இல்லை. ஆர்வத்தில் ரசிகர்கள்தான் என்னைச் சூழ்ந்தனர். சிலர் எனது காருக்குள் ஏற முயன்றனர். அப்போது அவர்களை கீழே இறங்குமாறு கூறினேன். ஒரு ரசிகர் மட்டும் ஆர்வக் கோளாறில் என்னைத் தொட்டார். அவ்வளவுதான்.

யாரும் என்னை அடிக்கவில்லை. அந்த செய்தி தவறு என்று கூறியுள்ளார் மம்மூட்டி.

இந்த சர்ச்சைக்கு பின்னணியில் இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. கைரளி என்ற மலையாள டிவி சேனலின் முக்கிய நிர்வாகி மம்மூட்டி. இந்த டிவியை நடத்துவது கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பினரயி விஜயன். இவருக்கும், அச்சுதானந்தனுக்கும் ஏழாம் பொருத்தம். எப்போதும் முட்டிக் கொண்டிருப்பார்கள்.

எனவே, விஜயன் தூண்டுதலின் பேரில்தான் மம்மூட்டி, அச்சுதானந்தனை விமர்சித்து வசனம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

மம்மூட்டி அடி வாங்கியதாக பரவியுள்ள செய்தியால் கேரளாவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil