»   »  ஸ்பானிஷ் படத்தில் வி்க்ரம்!

ஸ்பானிஷ் படத்தில் வி்க்ரம்!

Subscribe to Oneindia Tamil
Vikram
மெக்சிகோ அரசு தயாரிக்கவுள்ள ஸ்பானிஷ் மொழி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நம்ம ஊர் 'கந்தசாமி' விக்ரம். சுசி கணேசன் இயக்கும் இப்படத்துக்கு இணை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

இதற்கான முதல் கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்து ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

சென்னை எம்.ஆர்.சி நகரில் சனிக்கிழமை நடந்த கந்தசாமி படப்பிடிப்பில் செய்தியாளர்களைச் சந்தித்த தாணு மேலும் கூறியதாவது:

முதலில் கந்தசாமி படத்தின் பெரும்பகுதி காட்சிகளை கென்யாவில் படமாக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் அங்கு உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது. எனவே மெக்சிகோவில் படமாக்கத் தீர்மானித்தோம். மெக்சிகோ வித்தியாசமான, அழகான நாடுதான். ஆனால் நம்ம ஊரை விட நான்கு மடங்கு காஸ்ட்லி.

அங்கே குறிப்பிட்ட சில லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்த அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டோம். அதற்காக கந்தசாமி படத்தின் டிரெய்லரைப் போட்டுக் காட்டினோம். பார்த்ததும் அசந்து போய்விட்டார்கள். உடனடியாக அனைத்து உதவிகளும் செய்ய முன்வந்தார்கள்.

அட, அதுமட்டுமில்லீங்க... சென்னைக்கான மெக்சிகோ நாட்டு கவுரவ தூதராகவும் என்னை நியமித்து கடிதமும் கொடுத்துவிட்டார்கள்!.

அன்று இரவு மிகப் பிரமாதமான விருந்து கொடுத்து கவுரவித்தது மெக்சிகோ அரசு.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், கலை இயக்குநர் தோட்டா தரணி ஆகியோருடன் அந்நாட்டைச் சுற்றிப்பார்த்து தேவையான லொகேஸன்களைத் தேர்ந்தெடுத்தோம். இதற்காக ஒரு தனி ஹெலிகாப்டரையே அந்நாட்டு அரசு எங்களுக்குக் கொடுத்துவிட்டது.

எங்களுடன் வந்திருந்த கதாநாயகன் விக்ரமைப் பார்த்து அவரை ஒரு ஹாலிவுட் நடிகர் என்றே நினைத்துவிட்டனர் மெக்சிகோ அரசு அதிகாரிகள். விக்ரமும் சில நிமிடங்களிலேயே ஸ்பானிஷ் மொழியில் சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு அவர்களுடன் உரையாட அவர்கள் வியந்து நின்றனர். விருந்தின் முடிவில் அந்நாட்டு சல்சா நடனத்தை ஆடி அசத்தினார் விக்ரம்.

இதன் பிறகுதான் எங்கள் டீமுடன் இணைந்து படம் தயாரிக்கும் திட்டத்தை முன் வைத்தது மெக்சிகோ அரசு. நாங்களும் ஏற்றுக் கொண்டோம். கந்தசாமி படப்பிடிப்பு முடிந்ததும் மெக்சிகோ அரசின் படத்தை ஆரம்பித்துவிடப் போகிறோம், என்றார் தாணு.

உடனிருந்த விக்ரம் மற்றும் சுசி கணேசன் இருவரும் இந்தப்படம் இருநாட்டு உறவுகளுக்கும் புதிய அர்த்தம் தரும் என்றனர்.

செய்தியாளர் சந்திப்பின் போது, கந்தசாமி குழுவினரின் மெக்சிகோ பயணம் குறித்த 30 நிமிட வீடியோ திரையிடப்பட்டது.

இனி, 'சீயானுக்கு' ஸ்பெயின் மொழியில் பட்டப் பெயர் தேடணுமா...!

'ஜிங்குசீயான்'... இது நல்லா இருக்கா..?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil