For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரஜினியின் இருபது அவதாரங்கள்!

  By Staff
  |

  Rajini
  குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே பாடலில் 20 கெட்டப்களில் தோன்றுகிறார்.

  வேட்டையராஜா டைப் மன்னர் கெட்டப், ஸ்டைலானன இளைஞர், ராபின்ஹூட், எகிப்திய மன்னர் என விதவிதமான தோற்றங்களில் ரஜினி தோன்றவுள்ளார்.

  இது குறித்து இயக்குநர் பி.வாசுவிடம் கேட்ட போது, ரஜினி சார் ஒரு பாடலில் பல்வேறு தோற்றங்களில் நடிப்பது உண்மைதான். ஆனால் அவை என்னென்ன என்று இப்போது சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். இன்னும் சில நாள்தானே... நீங்களே தெரிந்து கொள்வீர்கள்...' என்றார்.

  மேலும் இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பிரமாண்டப் பாடலுக்காக அஜீத், விஜய், விக்ரம் ஆகிய முன்னணி இளம் நடிகர்கள் ரஜினியுடன் தோன்றப் போகிறார்கள்.

  தமிழ் சினிமாவின் 75-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதத்தில் இந்தப் பாடல் அமையும். அஜீத், விஜய், விக்ரமிடம் இதுகுறித்து இன்னும் நான் பேசவில்லை. விரைவில் அதுகுறித்த விவரங்களைத் தெரிவிப்பேன் என்றார் வாசு.

  இளமை துள்ளும் ரஜினி!

  வாவ்... ரஜினியா இது! இந்திய சினிமாவின் இன்றைய மார்கண்டேயன் யார் என்று கேட்டால் தயங்காமல் சொல்லலாம் அது சூப்பர் ஸ்டார் ரஜினி என்று. வயதை வென்ற மாபெரும் கலைஞன் என்பதை ஒவ்வொரு ஸ்டில்களிலும் நிரூபிக்கிறார்.

  புதிதாக வெளியாகியுள்ள குசேலன் பட ஸ்டில்களில் அவரது ஸ்டைலும் அழகும் சொக்க வைக்கும் விதத்தில் உள்ளன. இன்னும் இருபது வயது குறைந்து சிம்பு, தனுஷ் என இன்றைய இளசுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அதிகபட்ச இளமையுடன் அசத்தலாகக் காட்சியளிக்கிறார் ரஜினி.

  கே.பாலச்சந்தரின் கவிதாலயாவும் ஜி.பி.விஜயகுமாரின் செவன் ஆர்ட்ஸூம் இணைந்து தயாரிக்கும் குசேலன் படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிந்தது. டப்பிங் வேலைகளை முடித்த கையோடு, பத்திரிகையாளர்களைச் சந்தித்து குசேலன் ஸ்டில்களை அதிகாரப்பூர்வமாக வழங்கினார் இயக்குநர் பி.வாசு.

  செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

  இந்தியாவின் நிகரற்ற கலைஞர்களுள் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

  ரஜினி சார் முன்னெப்போதையும் விட இப்போதுதான் இன்னும் இளமையாகத் தெரிகிறார். வயதுக்கு அப்பாற்பட்ட ஒரு அபூர்வ கலைஞன் அவர்.

  ஆரம்பத்தில் சில காட்சிகளில் வருவதாகத்தான் அவரது திட்டம். ஆனால் ஸ்க்ரிப்டைப் பார்த்து கன்வின்ஸ் ஆகி முழு நீள கதாநாயகனாக வருகிறார். எடுத்து முடித்த படத்தைப் பார்த்து நான் நினைச்சதுக்கும் மேல நல்லா வந்திருக்குப்பா என்று பாராட்டினார் சூப்பர் ஸ்டார்.

  அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் ஒரு விஷூவல் விருந்தாக அமையப் போகிறது.

  82 நாளில் சாதனை

  இந்தப் படத்தை எடுத்து முடிக்க எனக்கு 82 நாட்கள் தேவைப்பட்டது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளுக்கும் சேர்த்தேதான் இந்தக் கணக்கு. ரஜினி சார், நயன்தாரா, மீனா தவிர, மற்ற எல்லா நடிகர்களும் தமிழுக்கும் தெலுங்குக்கும் மாற்றப்பட்டார்கள். மொத்தம் 33 நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

  இந்தப் படத்தில் ரஜினியின் பிரமாதமான ஸ்டைல் இருக்கும். அவரது வியக்க வைக்கும் அழகு, இளமைத் தோற்றம் பெரிய பிளஸ் பாய்ண்ட். எந்த வகையிலும் குறையில்லாத பிரமாண்டமான ஒரு படைப்பு இது.

  குசேலன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் வரும் ஜூன் 30 -ம் தேதி நடக்கிறது.

  ரஜினி வியந்த ஜி.வி.பிரகாஷ்

  ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பிரமாதமாக வந்துள்ளன. ஆரம்பத்தில் பிரகாஷைப் பார்த்த ரஜினி சார், இவரா... இவர் எப்படி இந்தப் படத்துக்கு? என நம்ப முடியாமல் கேட்டார். ஆனால் பாடல்களைக் கேட்டு முடித்ததும், ரஹ்மான் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதை நிரூபித்துவிட்டார் பிரகாஷ் என பாராட்டினார் ரஜினி.

  படத்தில் மூன்று பாடல்களில் ரஜினி தோன்றி பாடுகிறார். ஒரு பாடலில் பசுபதி மீனா வருகிறார்கள், என்றார் இயக்குநர் பி.வாசு.

  தெலுங்கில் கதாநாயகடு

  ஆரம்பத்தில் குசேலடு எனும் பெயரில்தான் இந்தப் படம் தெளுங்கில் தயாரானது. ஆனால் குசேலடு, பக்த குசேலடு என்றெல்லாம் அங்கே நிறைய பக்திப் படங்கள் வந்துவிட்டதால், இப்போது கதாநாயகடு என்று புதுப் பெயர் சூட்டியுள்ளனர் இப்படத்துக்கு.

  தெலுங்குப் படைப்பில் ரஜினியுடன் இன்னொரு நாயகனாக திரையைப் பகிர்ந்து கொள்கிறார் ஜெகபதிபாபு.

  வியக்க வைக்கும் வர்த்தகம்

  ஜூலை இறுதி வாரத்தில் 1200 பிரிண்டுகளுடன் உலகமெங்கும் ரிலீசாகிறது இரு மொழிகளிலும்.

  குசேலன் படத்தின் இந்திய உரிமையை பிரமிட் சாய்மிரா நிறுவனம் ரூ.64 கோடிக்கு வாங்கியிருக்கிறது. பிக் மியூசிக் நிறுவனம் ரூ.2.25 கோடிக்கு ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. உலக உரிமையை ஐங்கரன் நிறுவனம் பெற்றுள்ளது.

  தொலைக்காட்சி உரிமை கலைஞர் டிவிக்கு பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X