»   »  கோலிவுட்: 'டாப் 5' படங்கள்!

கோலிவுட்: 'டாப் 5' படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Prasanna with Kavya Madhavan
இந்த ஆண்டின் தொடக்கமே தமிழ் சினிமாவுக்கு சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. பொங்கலுக்கு வெளியான ஆறு படங்களுமே நஷ்டக் கணக்கு தொடங்கும் நிலையை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்திவிட்டன. இதை நாம் விவரங்களுடன் கூற வேண்டிய அவசியமின்றி, ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டுவிட்டார் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன்.

பொங்கல் ரிலீசுக்குப் பிறகு பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட படம் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். முதல் வாரம் மிகுந்த ஆவலுடன் டிக்கெட் எடுத்துப் பார்த்தவர்கள் நொந்துபோய் கொடுத்த எதிர்மறை கமெண்ட் படத்தின் அடுத்த வார வசூலை பாதித்துவிட்டது. படம் சுமாராகக் கூட இல்லாவிட்டாலும், முதல் வாரம் கிடைத்த பிரம்மாண்ட ஓபனிங், தயாரிப்பாளர் நாராயணனனை குசேலனாக்காமல் காப்பாற்றி விட்டதாகக் கூறுகிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் பண்டிதர்கள்.

சாதுமிரண்டா படம் முதல் வாரம் பெரிதாகப் போகாவிட்டாலும் இரண்டாவது வாரத்தில் சுமாராக பிக்கப் ஆகிவிட்டது என தெரிவிக்கின்றனர் படத்தை விநியோகித்துள்ள பிரமிட் சாய்மிரா நிறுவனத்தினர்.

இந்த வார நிலவரப்படி, அஞ்சாதே திரைப்படம் நல்ல ஓபனிங்குடன் முதலிடத்தில் உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அஞ்சாதேவுக்கு அடுத்த நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது ஹிருத்திக் - ஐஸ்வர்யா நடிப்பில் வெளிவந்துள்ள ஜோதா அக்பர் படத்துக்குதான். செவ்வாய்க்கிழமை இரவுக் காட்சி வரை படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த வரலாற்றுப் படத்தைக் காண மாணவ மாணவியர் கூட்டம் அலைமோதுவது, நிச்சயம் அக்பரின் சரித்திரத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் அல்ல என்பது சத்யம் திரையரங்கில் படத்தைப் பார்த்த போதுதான் புரிந்தது!

இந்த வார இறுதியில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் முதல் 5 இடங்களில் உள்ள படங்களின் நிலவரம்.

1. அஞ்சாதே- இயக்குநர்: மிஷ்கின். பிரமாதமான படம் என்று சொல்லுமளவுக்கு வந்துள்ள இந்த ஆண்டின் முதல் வெற்றிப் படம் அஞ்சாதே. அழுத்தமான கதை, நரேன், பிரசன்னா, அஜ்மல், விஜயலட்சுமி ஆகியோரின் தேர்ந்த நடிப்பு, நாற்காலியின் நுனிக்கு வரவைத்துவிடும் பரபர கிளைமாக்ஸ் போன்றவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். குறிப்பாக காட்சிகளில் மிஷ்கின் பயன்படுத்தியிருக்கும் புது யுக்திகள் அட என்று வியக்க வைக்க வைக்கின்றன. பெரிய குறையாக எல்லாரும் சொல்வது படத்தின் நீளத்தை. மிஷ்கின் மனது வைத்தால் அந்தக் குறையும் நீங்கிவிடும். பார்க்கலாம்!

2. தங்கம். இயக்குநர்: கிச்சா. கவுண்டமணியின் மறுபிரவேசமாக அமைந்திருக்கும் தங்கம் திரைப்படம் அதன் தயாரிப்பாளரே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. சுமார் ஒன்றரை கோடிக்கும் குறைவான முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் முதல் வாரத்திலேயே போட்ட காசை திரும்பக் கொடுத்துவிட்டது தயாரிப்பாளரும் இயக்குநருமான கிச்சாவுக்கு. பத்தாண்டுகளுக்குப் பிறகும் கவுண்டமணி-சத்யராஜ் காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகும் என்பதை நிரூபித்துள்ள படம், மீண்டும் கவுண்டரை பிஸியாக்கியிருக்கும் படம், பெயருக்கேற்ப தங்கமாகக் கொட்டிக் கொண்டிருக்கும் படம்!

3. சாதுமிரண்டா. இயக்குநர்: சித்திக். முதல் வாரம் பெரிதாக வசூல் இல்லை. ஆனால் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமம் சார்ந்த பகுதிகளில் சித்திக்கின் டாம் அண்ட் ஜெர்ரி டைப் நகைச்சுவைக் காட்சிகளுக்கு ஏக சிரிப்பலையாம்.

4. இந்திரலோகத்தில் நா அழகப்பன்: இயக்குநர் தம்பி ராமையா. இந்தப் படத்துக்கு நான்காமிடமா என்று கமெண்ட் வல்லுநர்களிடமிருந்து குரல் கேட்கிறது. உண்மை நிலவரப்படி, படத்தின் முதல் வார வசூல் எதிர்பாராத அளவுக்கு அதிகமாக இருந்துள்ளது. இரண்டாவது வாரத்தில்தான் டிராப் ஆக ஆரம்பித்துள்ளது. இன்னும் ஒரு வாரம் சுமாரான வசூலுடன் ஓடினாலே போதும், மாணிக்கம் நாராயணனுக்கு லாபம்தான் என்கிறார்கள் கோடம்பாக்கம் பண்டிதர்கள். உண்மையை நாராயணனே சொன்னால்தான் உண்டு. சொல்வாரா?

5. பீமா. இயக்குநர்: லிங்குசாமி. படம் வெளியான சில நாட்களிலேயே ரூ. 20 கோடி கலெக்ஷன் என்றெல்லாம் செய்திகள் வந்த நிலையில், இந்தப் படம் இப்போது 70 சதவிகித திரையரங்குகளில் தூக்கப்பட்டிருக்கிறது! நகர்புறப் பகுதிகளில் மட்டும் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளாக சில திரையரங்குகளில் ஒடிக் கொண்டிருக்கிறது. ஏப்ரலில் புதுப்படங்கள் வரும் வரை ஓட்டியாக வேண்டிய கட்டாயம் தியேட்டர்காரர்களுக்கு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil