»   »  நெட்டில் உலா வரும் மருதநாயகம்

நெட்டில் உலா வரும் மருதநாயகம்

Subscribe to Oneindia Tamil
Kamala Hasan
கமல்ஹாசனின் கனவுக் காவியமான மருதநாயகம் படத்தின் டிரைலர் சில வீடியோ இணையத் தளங்களில் உலா வந்து கொண்டுள்ளது.

கமல்ஹாசனின் கனவுப் படம் மருதநாயகம். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்திற்குப் பூஜை போட்டார் கமல். சாதாரண பூஜையாக அது நடக்கவில்லை. இங்கிலாந்து ராணி எலிசபெத் வந்து பூஜையில் கலந்து கொண்டார்.

பெரும் பொருட் செலவில் எடுக்கப்படவிருந்த இந்தப் படம், பொக்ரானில் இந்தியா போட்ட அணு குண்டால், ஸ்தம்பித்துப் போனது. அமெரிக்காவிலிருந்து பெரும் நிதியுதவியைப் பெறவிருந்த கமலுக்கு, இந்தியா நடத்திய அணு குண்டு சோதனையால் அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடையால் அந்த நிதி வராமல் போனது. இதனால் மருதநாயகம் நின்று போனது.

மருதநாயகம் படத்தின் ஸ்டில்கள் தான் இணையத் தளங்களில் உலா வந்து கொண்டிருந்தன. இந் நிலையில் படத்தின் பல நிமிட வீடியோ டிரைலர் தற்போது சில இணையத் தளங்களில் உலா வர ஆரம்பித்துள்ளனவாம். இது எப்படி லீக் ஆனது என்று தெரியவில்லை.

அந்த 2 நிமிட வீடியோவில், இங்கிலாந்து ஆட்சிக்காலத்துப் பின்னணியில் நடைபெறும் ஒரு சண்டைக் காட்சி இடம் பெற்றுள்ளது. கமல்ஹாசன் சண்டைக் காட்சியில் இடம் பெற்றுள்ளார். மயிர்க்கூச்செறியும் வகையில் அந்த சண்டைக் காட்சி இடம் பெற்றுள்ளதாம்.

இன்னொரு காட்சியில், இறந்து கிடக்கும் கமல்ஹாசனின் உடலை கழுகு ஒன்று குத்திக் கிழிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த இரு காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ள விதம் படு பிரமிப்பாக உள்ளதாம். இதைப் பார்த்த பலரும், இப்படிப்பட்ட படம் உருவாகாமல் தேங்கிக் கிடப்பதைப் பார்த்து வருத்தத்துடன் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசனுக்குள் உறைந்து கிடக்கும் மருதநாயகம் விரைவில் உயிர் பெறும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று அவரது ரசிகர்கள் அபார நம்பிக்கையில் உள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil