twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியலில் 'அடி' வாங்கிய நடிகர்கள்!

    By Staff
    |

    Karthick
    ஆந்திராவுக்கு என்.டி.ஆர்., தமிழ்நாட்டுக்கு எம்.ஜி.ஆர். இந்த இரு பெரும் மனிதர்களின் இடங்களைப் பிடிக்க தமிழகத்திலும் சரி, ஆந்திராவிலும் சரி பெரிய அடிதடியே நடக்கிறது. ஆனாலும் அந்த இடத்தின் நிழலுக்கு அருகில் கூட யாரும் வர முடியாத நிலை.

    இரு மாநில மக்கள் மனதிலும் சரி எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். குறித்த தனி மரியாதையும், மக்கள் மனதில் நிரந்தர இடமும் உள்ளது. அந்த இடத்தை யாருக்கும் பங்கு போட்டுத் தர மக்கள் இன்னும் தயாராகவில்லை என்பது சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால் தெரியும்.

    எம்.ஜி.ஆருக்குப் பின்னர் அல்லது அவரைப் பார்த்து நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள்.

    சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர். இருந்தவரை காங்கிரஸில் இருந்தார். பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டு தனிக் கட்சி கண்டார். என்ன ஆனார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரது ஓட்டையே அவரால் போட முடியாத நிலை. அவரது ஓட்டையே கள்ள ஓட்டுப் போட்ட கொடுமை அன்றைய பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியானது.

    டி.ராஜேந்தர் எம்.ஜி.ஆரையே எதிர்த்து அரசியல் செய்தவர். பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் நிழலில் இருந்தவர். இருவருமே அந்தக் காலகட்டத்தில் திமுக, அதிமுகவுக்கு பெரும் பிரசார பீரங்கிகளாக இருந்தனர். கடைசி வரை பீரங்கியாகவே அதற்கு மேல் அவர்களால் போக முடியவில்லை.

    இருவரும் தனித் தனியாக கட்சிகளையும் தொடங்கி நடத்திப் பார்த்தவர்கள். இதில் பாக்யராஜ் சற்று சுதாரித்து கட்சியை இழுத்து மூடி விட்டு சினிமாவோடு ஒதுங்கிக் கொண்டார். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு திடீரென திமுகவில் இணைந்தார் தேர்தலின்போது பிரசாரம் செய்தார். அத்தோடு நிறுத்திக் கொள்கிறார். அரசியலால் அவர் பட்ட கஷ்டத்தை இன்னும் அவர் மறக்கவில்லை. இதனால் அளவோடு வைத்துக் கொள்கிறார்.

    ராஜேந்தர் இன்னும் விடாப்பிடியாக தனிக் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

    இவர்கள் இருவரும் சினிமாவில் ஜாம்பவான்கள். ஆனால் அரசியலில் பெரும் ஜீரோ என்றுதான் சொல்ல வேண்டும்.

    அதோபோலத்தான் கார்த்திக், சரத்குமார். இருவரும் அரசியல் பெரும் பிரளயத்தை ஏற்படுத்துவார்கள் என ஒரு காலத்தில் கருதப்பட்டது. அதிலும் கார்த்திக்கைப் பார்த்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சற்று மிரண்ட பார்வை பார்த்துக் கொண்டிருந்தன.

    ஆனால் இன்று கார்த்திக்கைப் பார்த்து ஒரு பூனை கூட பயப்படுவதில்லை. அந்த அளவுக்கு ஹீரோவாக இருந்து ஜீரோவாகியுள்ளார் கார்த்திக்.

    சரனாலயம் என்ற அமைப்பை கார்த்திக் நடத்தி வந்தபோது அவருக்கு பெரும் தொண்டர் பலம் கிடைத்தது. முக்குலத்தோர் இன வாலிபர்கள் அலை அலையாக கார்த்திக் கூட்டங்களுக்குத் திரண்டு வந்தனர். அந்த அலை வெறும் ஆர்ப்பரிப்போடு கடலோடு நின்று போனதே தவிர, கரைக்கே அது வந்து சேரவில்லை. இதனால்தான் கார்த்திக்காலும் கரை சேர முடியாமல் போய் விட்டது.

    அதேபோலத்தான் சரத்குமார். இவர் திமுகவிலிருந்து வெளியே வந்து தனிக் கட்சி தொடங்கி தனது செல்வாக்கை அரசியல் கட்சிகளுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று திமுகவில் சரத்குமார் உச்சத்தில் இருந்தபோதே நாடார் சமூக அமைப்புகள் ஒன்று சேர்த்து வலியுறுத்தின. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்து விட்டார் சரத்குமார்.

    ஆனால் திமுகவில் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி வெளியேறி என்றைக்கு அவர் அதிமுகவில் போய்ச் சேர்ந்தாரோ அன்றே அவர் மீதான நம்பிக்கை பலருக்கும் போய் விட்டது.

    அதிமுகவுக்குப் போனவர் அதே வேகத்தோடு திரும்பி வந்து தனிக் கட்சியைக் கண்டார். ஆனால் இன்று வரை சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ கட்சியால் எந்தவிதமான பாதிப்பையும் யாருக்கும் இதுவரை ஏற்படுத்த முடியாத நிலை.

    இப்படி தமிழகத்தில் எம்.ஜி.ஆரை முன்மாதிரியாகக் கொண்டும் அல்லது அவரது இடத்தை மனதில் கொண்டும் எத்தனையோ பேர் அரசியலுக்குள் பாய்ந்தவண்ணம் உள்ளனர். ஆனாலும் வெற்றி அடைந்தவர்கள் என்று இதுவரை யாரையும் சொல்ல முடியவில்லை.

    விஜயகாந்த் மட்டுமே இதில் ஓரளவு வெற்றி பெற்று வருகிறார் என்று சொல்லலாம். தனது சினிமாக் கவர்ச்சியையும் தாண்டி ஒரு அரசியல் சக்தியாக அவர் ஓரளவு வளர்ந்து நிற்கிறார்.

    விஜய் தனக்கென தனி இளம் பட்டாளத்தை வைத்துக் கொண்டிருப்பவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனாலும் அரசியல் படு அபாயகரமானது. பணம், படை, அதிகாரம் ஆகிய மூன்றை நம்பித்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்கு இன்றைய அரசியல் களம் மாறிப் போயுள்ளது.

    எனவே, இதை மனதில் கொண்டு விஜய் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X