»   »  மன்னிப்பு கேட்டார் சிரஞ்சீவி

மன்னிப்பு கேட்டார் சிரஞ்சீவி

Subscribe to Oneindia Tamil
Chiranjeevi with Rajasakar and Jeevitha
டாக்டர் ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தனது ரசிர்கள் நடத்திய வெறித் தாக்குதலுக்கு நடிகர் சிரஞ்சீவி வருத்தம் தெரிவித்துள்ளார். ராஜேசகரிடமும், ஜீவிதாவிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜசேகர் மீதான தாக்குதலைக் கேள்விப்பட்டதும் சிரஞ்சீவி உடனடியாக ராஜசேகர் வீட்டுக்கு விரைந்தார். அங்கு ராஜசேகர் குடும்பத்தினரை சந்தித்தார். தாக்குதலில் தலையில் காயமடைந்த ராஜசேகரின் மகள் ஷிவானியை ஆறுதலாக அரவணைத்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சிரஞ்சீவி பேசுகையில், இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது நடந்திருக்கக் கூடாது.

ரசிகர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். டாக்டர் ராஜசேகரின் பேச்சு அவர்களைப் பாதித்துள்ளது. ஆனால் ஜனநாயக வழியில் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. டாக்டர் ராஜசேகர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சில் எந்தத் தவறும் இல்லை. அது அவரது உரிமை. அதற்காக வன்முறையில் இறங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது.

அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் அழைத்து இதுபோன்று வன்முறைச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்ளவிருக்கிறேன்.

ராஜசேகர் எனது சகோதரர். தெலுங்குத் திரையுலக குடும்பத்தில் அவரும் ஒரு உறுப்பினர். நடந்த சம்பவத்திற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் ராஜசேகரிடமும், ஜீவிதாவிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் சிரஞ்சீவி.

அப்போது ஒரு செய்தியாளர், உங்களது புதுக் கட்சியை எப்போது தொடங்கப் போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு கோபமடைந்த சிரஞ்சீவி, இந்த இடத்தில் இப்படிக் கேள்வி கேட்கலாமா. அதற்கான இடமா இது என்றார்.

பின்னர் டாக்டர் ராஜசேகர் பேசுகையில், எனது குடும்பத்தினர் மீதான தாக்குதலை சிரஞ்சீவி கண்டித்த விதம் எனக்கு திருப்தி அளித்துள்ளது. வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது.

எனது குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு முதல்வர் ராஜசேகர் ரெட்டியை நேரில் சந்தித்து கேட்டுக் கொள்ள உள்ளேன் என்றார்.

சிரஞ்சீவி ரசிகர்கள் அராஜகம்-ராஜசேகருக்கு அடி

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil