»   »  எனக்கு எதிராக சதி-வடிவேலு

எனக்கு எதிராக சதி-வடிவேலு

Posted By:
Subscribe to Oneindia Tamil
Shreya with Vadivelu

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படம் நன்றாக வந்திருப்பதை அறிந்ததிலிருந்தே எனக்கு எதிராக பல சதி வேலைகள் நடக்கின்றன. சிலர் எஸ்.எம்.எஸ். மூலம் எனக்கு எதிரான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படம் நாளை மறுநாள் திரைக்கு வருகிறது. இதற்காக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வடிவேலு கூறியதாவது:

நான் ரொம்ப கஷ்டப்பட்டுதான் இந்த சினிமாவை ஜெயித்தேன். இந்தப் படத்துக்காக நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. கிட்டத்தட்ட 20 படங்களை இழந்திருக்கிறேன், இந்த ஒரு படத்தை முடிக்க.

படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகளே வியந்துபோய், வடிவேலு இந்தப் படத்தில் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்று பாராட்டியதோடு, குழந்தை குட்டி, பொண்டு பொடிசுகளோடு போய் பார்க்க வேண்டிய படம் இது என யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

நாம இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒரு படத்துல நடிச்சு முடிச்சா, அங்க ஒரு கூட்டமே நமக்கு எதிரா வேலை பாக்குதுண்ணே... அவங்க செய்ற வேல என்னங்கறீங்க... எனக்கு எதிரா தப்புத் தப்பா புரளிய எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பறதுதான்... இப்பவும் அது நடந்துக்கிட்டுதான் இருக்கு.

இவிங்களுக்கு நான் சினிமாவுல ஹீரோவா வேசம் கட்டறதே கடுப்பா இருக்கும் போல. இதுல பல முண்ணனி ஆளுங்களும் உண்டு (குறிப்பிட்ட நடிகர் ஒருவரின் ரசிகர்கள் இந்த வேலையை தீவிரமாகச் செய்வதாகவும் குறிப்பிட்டார் வடிவேலு). நேரம் வரும்போது எல்லாத்தையும் போட்டு உடைக்கத்தான் போறேன்.

அந்த ஸ்ரேயா பொண்ணு தெரியாத்தனமா ஒரு பாட்டுக்கு நம்ம கூட ஆடினாலும் ஆடுச்சு, ஆளாளுக்கு அந்தப் பிள்ளய கரிச்சுக் கொட்டிட்டாய்ங்க. அதுவும் இனிமே இப்பிடியெல்லாம் ஆட மாட்டேன்னு சத்தியம் அடிக்க வேண்டியதா போச்சு. எப்படியெல்லாம் இருக்காய்ங்க பாருங்கண்ணே... இதுங்கல்லாம் காத்து கருப்பு மாதிரி. இதுக்கெல்லாம் பயப்படற ஆளா நானு. அந்த மாதிரி மண்ணுலருந்தா வந்திருக்கேன்... இந்த காத்து கருப்புகள நானும் என் ரசிகர்களுமே ஒட்டிடுவோம்ல... யாருகிட்ட!

எனக்குன்னு ரசிகர் மன்றமெல்லாம் தனியா கிடையாது. நம்மாளுங்க எல்லா இடத்திலயும் இருக்காங்க. இந்த வயித்தெரிச்சல் பார்டிகள நிம்மதியா விடமாட்டேன். இனி வருசத்துக்கு 2 படம் ஹீரோவா நடிக்கப் போறேன். மத்த ஹீரோக்களோட படங்களில் காமெடியனாவும் வருவேன்...

இந்தப் படத்தில் 3 வேஷம் கட்டியிருக்கேன். ஆனா 6 வித கெட்டப்புல வந்திருக்கேன். 90 வயசு கிழவனா கூட வர்றேன். எமன் வேடத்தில் நடிக்கத்தான் நான் ரொம்ப சிரமப்பட்டேன். தினமும் காலையில் 15 இட்லி, மதியம் வயிறுமுட்ட பிரியாணி, ராத்திரில 10 இட்லின்னு சாப்பிட்டு ஏகத்துக்கும் உடம்ப ஏத்தினேன். இப்ப அதயெல்லாம் இறக்கணும்... என்று தன் பாணியில் பேசியவர், சீரியஸாகி இப்படிச் சொன்னார்.

அண்ணே... அந்தக் காலப் படங்கள் விதைப்பட்டன. இன்னிக்கு வீசப்படுகின்றன. அதனால்தான் அன்றைய படங்கள் காலத்தைத் தாண்டி இன்றும் ஒரு பாடமாக இன்றும் நிலைத்து நிற்கின்றன. இன்றைய படங்களோ மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு விடுகின்றன.

அன்றைய இயக்குநர்கள் பீஷ்மர்களுக்கு நிகரானவர்கள். இசையமைப்பாளர்களோ பிரம்மாக்கள். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேவர்களுக்கு சமமாக படங்களைச் செதுக்கினர். இன்றைக்கு அந்த சின்சியாரிட்டி இல்லை... என்னுடைய படங்கள் அந்த நிலையை மாற்றும் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil