»   »  படமாகும் பார்த்திபன் கதை!

படமாகும் பார்த்திபன் கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Parthiban with Chaya Singh
'புதுமைப் பித்தன்' பார்த்திபன் - சீதாவின் கதை படமாகிறது. வல்லமை தாராயோ படத்தின் கதை, பார்த்திபன், சீதாவின் நிஜக் கதை என்று கூறப்படுகிறது.

அவ்வப்போது சில நல்ல படங்களில் நடிப்பது பார்த்திபனின் வழக்கம். அழகி, தென்றல் ஆகிய அருமையான படங்களுக்குப் பிறகு அவர் லேட்டஸ்டாக நடித்த சிறந்த படம் அம்முவாகிய நான்.

இப்படத்தின் நாயகி பாரதி பெரிதாக பேசப்பட்டாலும், பார்த்திபன் ஏற்று நடித்த வேடமும் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு நல்ல படத்தில் நடிக்க வருகிறார் பார்த்திபன். புதுமுக இயக்குநர் மதுமிதாவின் கைவண்ணத்தில் உருவாகவுள்ள வல்லமை தாராயோ படத்தில் தனது திறமையைக் காட்டவுள்ளார் பார்த்திபன்.

மதுமிதா, கெளதம் மேனனிடம் உதவியாளராக இருந்தவர். முதல் முறையாக இயக்க வருகிறார்.

வல்லமை தாராயோ படத்தின் கதை, பார்த்திபன் - சீதாவின் நிஜக் கதையாம். இதை இயக்குநர் மதுமிதாவும் ஆமோதித்துள்ளார். ரொம்ப நல்லவனாக இருக்கும் ஒருவனை அவனது மனைவி விவாகரத்து செய்கிறார். அதன் பின்னர் அவனின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள், நிகழ்வுகளை விளக்குவதே இப்படத்தின் கதையாம்.

வல்லமை தாராயோ படத்தின் தொடக்க விழா வித்தியாசமாக இருந்தது. பெண் இயக்குநர் படம் என்பதாலோ என்னவோ விழாவுக்கு ஏராளமான பெண் பிரமுகர்களை விழாவில் காண முடிந்தது.

கூடுதல் டிஜிபி திலகவதி, மகப்பேறு மருத்துவர் டாக்டர் கமலா செல்வராஜ், வழக்கறிஞர் சுமதி, எழுத்தாளர் சிவசங்கரி, நடிகை குஷ்பு, இயக்குநர் பிரியா.வி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

குஷ்பு பேசுகையில், பிரியா போல, மதுமிதா போல மேலும் பல பெண் இயக்குநர்கள் சினிமாவில் சாதிக்க வர வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார்.

வல்லமை தாராயோ படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக சாயா சிங் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சாயா சிங் நடிக்கும் படம் இது. பரத்வாஜ் இசையமைக்கிறார். நளினி சுந்தரராமன் (மதுமிதாவின் தாயார்) தயாரிக்கிறார்.

வல்லமை தாராயோ, ரசிகர்களிடமிருந்து நல்ல ரிசல்ட்டையும் தர வாழ்த்துவோம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil