”மாயா” ஹீரோ ஆரியின் திருமணம்- இன்று சென்னையில் நடைபெற்றது!
சென்னை: கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான ஆரியின் காதல் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.
டைரக்டர்கள் கே.பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ரெட்ட சுழி படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆரி.
தொடர்ந்து ஆடும் கூத்து, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, தரணி, நெடுஞ்சாலை, மாயா ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

காதல் மலர்ந்த தருணம்:
இவருக்கும், இலங்கையை சேர்ந்த நதியா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. நதியா பி.ஏ அக்கவுன்டன்சி பட்டதாரி.

காதலும், விருப்பமும்:
லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஆரி-நதியா இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

பெற்றோர்கள் சம்மதம்:
இவர்கள் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

மணமக்களுக்கு வாழ்த்து:
திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. அதில், ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மூன்று வருட நட்பு:
இதுகுறித்து அவர், ‘‘நானும், நதியாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டோம். இரண்டு பேருக்கும் பொதுவான நண்பர் மூலம் எங்கள் நட்பு உருவானது. கடந்த மூன்று வருடங்களாக நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். சமீபத்தில்தான் அது காதலாக மாறியது.

திருமணம் செய்ய முடிவு:
இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தோம். எங்கள் முடிவை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டார்கள். எனவே இது, பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் ஆகும்'' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











