வனிதா தந்தை விஜயகுமாரிடம் அப்படி ஒரு கேள்வி கேட்ட ரஜினி?.. ஆத்தாடி இவ்வளவு ஓபனா இருந்திருக்காரே
சென்னை: ரஜினிகாந்த் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசனுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இரண்டு பேரும் 40 வருடங்களுக்கு பிறகு சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜயகுமாரிடம் ரஜினிகாந்த் கேட்ட கேள்வி குறித்து ராதாரவி பேசியிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்தார். பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றியை பெறவில்லை. விமர்சன ரீதியாக பலத்த அடியை வாங்கிய கூலி வசூலிலும் காலை வாரிவிட்டது. ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், 500 கோடி ரூபாயைக்கூட படம் தொடவில்லை என்கிறது பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம்.
ஜெயிலர் 2: கடைசியாக ரஜினி நடித்த படங்களில் ஜெயிலர் படத்தை தவிர்த்து மற்ற படங்கள் சுமாரான ஹிட்தான். கூலிக்கு முன்னதாக வெளியான வேட்டையனும் அந்த லிஸ்ட்டில்தான் இருக்கிறது. எனவே ஜெயிலர் கொடுத்த பெரிய ஹிட் வைபை எப்படியாவது மீண்டும் எடுத்திட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக உழைக்க ஆரம்பித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். இப்போது அவர் ஜெயிலர் 2வில் நடித்துவருகிறார்.

அதே ரிசல்ட் கிடைக்குமா?: ரஜினி மற்றும் நெல்சன் ஆகிய இரண்டு பேருக்குமே ஜெயிலர் படம் கரியரில் முக்கியமான படம் ஆகும். ஏனெனில் அந்தப் படத்துக்கு முன்பு இருவருமே தோல்வி முகத்தில்தான் இருந்தார்கள். அப்படம்தான் அதனை மாற்றி வைத்தது. எனவே முதல் பாகம் எந்த மாதிரியான ரிசல்ட்டை எடுத்ததோ அதைவிட டபுள் மடங்கு பாசிட்டிவ் ரிசல்ட்டை பெறுவதற்கு படக்குழு செயலாற்றிவருகிறது.
கமலுடன் நடிக்கும் ரஜினி?: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் பெரிய சர்ப்ரைஸுக்கு கோலிவுட் காத்திருக்கிறது. அதாவது ரஜினியும், கமலும் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பு சேர்ந்து நடித்தார்கள். அதற்கு பிறகு அவ்வாறு நடிக்கவில்லை. இப்போது அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து ஒரு படத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியிருக்கின்றன. அதனை அவர்களும் உறுதி செய்திருக்கிறார்கள்.
ராதா ரவி பேட்டி: இப்படி இந்த வயதிலும் படு வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரஜினி பற்றி நடிகர் ராதாரவி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த்தும், விஜயகுமாரும் ரொம்பவே நெருக்கமான நண்பர்கள். அவர்களுக்குள் பல கதைகள் இருக்கின்றன. விஜயகுமார் எப்போதுமே சத்தமாகத்தான் சிரிப்பார். ஒருமுறை அப்படி சிரிக்கும்போது அருகில் இருந்த ரஜினியோ விஜயகுமாரிடம், 'நீங்கள் உண்மையிலேயே இப்படித்தான் சிரிப்பீர்களா இல்லை நடிக்கிறீர்களா' என கேட்டுவிட்டார். அதனை விஜயகுமார் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











