»   »  விஜய்க்கு அன்புமணி அறிவுரை!

விஜய்க்கு அன்புமணி அறிவுரை!

Subscribe to Oneindia Tamil
Vijay with Shriya
திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு, மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.

அரசியலும், சினிமாவும் தமிழ்நாட்டின் இரு கண்கள் என்பார்கள். ஆனால் இந்த இரு துறைகளும் அவ்வப்போது உரசிக் கொள்வது வழக்கம்.

சில காலத்திற்கு முன்பு தமிழில்தான் படப் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என்று கூறி சில கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.

பிறகு திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக கொடி பிடித்தது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை குறி வைத்து பாமக களம் இறங்கியது.

ரஜினி இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். அதேபோல, ஷாருக்கானுக்கும் அட்வைஸ் செய்தார்.

அன்புமணியின் அட்வைஸை ஷாருக்கான் ஏற்றாரோ, இல்லையோ, ரஜினி சட்டென்று ஏற்றுக் கொண்டார். சந்திரமுகி, சிவாஜி ஆகிய படங்களில் ஒரு சீனில் கூட அவர் புகைப் பிடிப்பது போல காட்சி வரவில்லை. அதேசமயம், தனது ஸ்டைலையும் விடாமல் சாக்லேட்டை தூக்கிப் பிடித்து சாப்பிடுவது போல மாற்றி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டையும் பெற்றார்.

இந்த நிலையில் தற்போது விஜய்யை குறி வைத்து பேச ஆரம்பித்துள்ளார் அமைச்சர் அன்புமணி.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இளைய தலைமுறையினர் இன்றைய நடிகர்களை அப்படியே பின்பற்றுகின்றனர். எனவே புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதை நடிகர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை முன்பு நான் ரஜினிகாந்த்துக்கு வைத்தபோது அவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். அவர் கடைசியாக நடித்த சந்திரமுகி மற்றும் சிவாஜி ஆகிய இரு படங்களிலும் அதுபோன்ற காட்சி இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார்.

அதேபோல தற்போது முன்னணியில் உள்ள நடிகர் விஜய்யும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது. அதுபோன்ற காட்சிகள் இனிமேல் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றால் அந்தக் காட்சிகளுக்கு தணிக்கை வாரியமும் அனுமதி தரக் கூடாது என்று கூறியுள்ளார் அன்புமணி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil