»   »  தல காங்கேயன்!!

தல காங்கேயன்!!

Subscribe to Oneindia Tamil

காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த அஜீத்தும், இயக்குநர் சரணும் மீண்டும் இணைந்து மிரட்ட வருகின்றனர்.

காதல் மன்னன் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் பாலச்சந்தரின் சிஷ்யப் பிள்ளைகளில் ஒருவரான சரண். இப்படம் சரணுக்கு மட்டுமல்லாமல் அஜீத்துக்கும் பெரிய பிரேக்கைக் கொடுத்தது. அடுத்து அஜீத்தை வைத்து சரண் இயக்கிய அமர்க்களம், அஜீத்துக்கு ஆரவார வெற்றியைக் கொடுத்தது.

தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த அஜீத்துக்கு, அமர்க்களம் வந்து உயிர் கொடுத்தது. அதைத் தொடர்ந்து அஜீத் அட்டகாச ஸ்டாராக உருவெடுத்தார்.

அடுத்து அஜீத்துக்காக சரண் உருவாக்கிய கதைதான் ஜெமினி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதில் அஜீத் நடிக்க முடியவில்லை. அஜீத்துக்கும், சரணுக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளே இருவரும் இப்படத்தில் இணைய முடியாமல் போனதற்குக் காரணம்.

இதைத் தொடர்ந்தே ஏவி.எம்.முடன் இணைந்து விக்ரமை வைத்து ஜெமினியை எடுத்து பட்டையைக் கிளப்பினார் சரண்.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத்தும், சரணும் இணைந்த படம் அட்டகாசம். இந்தப் படமும் வெற்றிகரமாக அமைய அஜீத், சரண் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்ற புதிய பார்முலா உருவானது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இரு நண்பர்களும் இணைகின்றனர். இது அஜீத், சரண் இணையும் நான்காவது படமாகும். இந்த இடைப்பட்ட காலத்தில் இருவருமே சில நஷ்டங்களை சந்தித்துள்ளனர்.

சரணுக்கு வட்டாரம், முனி, அஜீத்துக்கு ஆழ்வார். இதையடுத்து இருவரும் இணைந்து புதிய படத்தைக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்தை சரணே தனது ஜெமினி புரடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளார்.

தற்போது சூர்யா, ஆசின் நடிப்பில், ஹரி இயக்கத்தில் வேல் படத்தைத் தயாரித்து வருகிறார் சரண். அதை முடித்த பின்னர் அஜீத்துடன் இணைகிறார்.

இதற்கிடையே அஜீத்தின் இன்னொரு பேவரிட் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரத்தை முடித்துவிட்டு மீண்டும் தலவுடன் கைகோர்க்கிறார்.

படத்தின் பெயர் காங்கேயன். அதன் புரோமோஷன் ஸ்டில்களே படு மிரட்டலாக வந்துள்ளன.

கதையும் கலக்கலாக இருந்தால் தல பின்னிரும்..சேர்ந்து வாங்க, தூள் பண்ணுங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil