»   »  'ஒசி'களின் நெருக்குதல் - பில்லா 'பிரீமியர்' ரத்து!

'ஒசி'களின் நெருக்குதல் - பில்லா 'பிரீமியர்' ரத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ajith
ஓசி டிக்கெட் கேட்டு பல்வேறு தரப்பினரும் நெருக்கியதால், கடுப்பான அஜீத், பில்லா படத்தின் சென்னை மற்றும் கோலாலம்பூர் பிரீமியர் ஷோக்களை ரத்து செய்யுமாறு தயாரிப்பாளரிடம் கூறி விட்டார். இதையடுத்து இரு ஊர்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேஷக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டனவாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பில்லா, அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில் ரீமேக் ஆகியுள்ளது. நாளை உலகெங்கும் திரைக்கு வருகிறது. படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி விட்டன. பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டதாலும், ரஜினி நடித்த படம் ஒன்று முதல் முறையாக ரீமேக் ஆகி வருவதாலும், பில்லா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ரஜினி மற்றும் அஜீத் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகினரும் கூட பில்லாவை பார்க்க ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை மற்றும் கோலாலாம்பூர் நகரங்களில் முக்கியப் பிரமுகர்களுக்காக சிறப்புக் காட்சிக்கு இன்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் ஆனந்தா சுரேஷும், விநியோகஸ்தரான பிரமீட் சாய்மீரா நிறுவனமும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

சென்னையில் சத்யம் தியேட்டர் வளாகத்தில் பில்லாவின் சிறப்பு காட்சி இன்று இரவு நடப்பதாக இருந்தது. ஆனால் இப்போது இது ரத்து செய்யப்பட்டு விட்டது.

திரைத் துறைப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் என பல்வேறு துறையினரும் டிக்கெட் கேட்டு நெருக்கியதே இதற்கு முக்கியக் காரணம்.

இத்தனை பேரும் டிக்கெட் கேட்டு அணத்தியதால் யாருக்குக் கொடுப்பது, யாரை விடுவது என்று குழம்பிப் போய் விட்டாராம் தயாரிப்பாளர் சுரேஷ். இதையடுத்து ஐனாக்ஸ் திரையரங்க விழாவில் இன்னொரு காட்சிக்கு ஏற்பாடு செய்யத் திட்டமிட்டார்.

இந்தத் தகவல் அஜீத் காதுகளை எட்டியது. உடனடியாக சுரேஷையும், பிரமீட் நிறுவனத்தையும் அழைத்த அவர், சிறப்புக் காட்சியே வேண்டாம். முதலில் எனது ரசிகர்கள் படத்தைப் பார்க்கட்டும். சிறப்புக் காட்சிகளை உடனடியாக ரத்து செய்து விடுங்கள் என்று கூறி விட்டார்.

இதுதான் சரியான வழி என்று நினைத்த தயாரிப்பாளரும் பிரிமியர் காட்சிகளை ரத்து செய்து விட்டாராம்.

ஆனாலும் சற்றும் மனம் தளராத 'ஓசி' பார்ட்டிகள், பிரீமியர் போனால் என்ன, படம் ரிலீஸாகும் முதல் நாளன்று, முதல் காட்சியைப் பார்க்க தங்களுக்கு டிக்கெட் தருமாறு இப்போது டிராக்கை மாற்றி 'அனத்தலை' தொடர்ந்து வருகிறார்களாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil