ஆளே மாறிப்போன அஜித்குமார்.. மார்பில் குத்தியிருக்கும் டாட்டூ என்ன உருவம் தெரியுமா?.. இவ்வளவு ஈர்ப்பா?
சென்னை: நடிப்பிலும் கார் ரேஸிலும் கவனம் செலுத்திவரும் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இரண்டாவது முறையாக அவர்கள் இணையவிருக்கும் திரைப்படம் ஜனரஞ்சகமாக அமையும் என்று இயக்குநர் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் ஏகே தனது குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன.
அஜித்குமார் இந்த வருடத்தில் விடாமுயற்சி, குட் பேட் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். ஒரு படத்தை மகிழ் திருமேனியும், இன்னொரு திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கியிருந்தார். இவர்கள் இரண்டு பேருடனும் ஏகே முதன்முறையாக இணைந்திருந்தார். இதன் காரணமாக ஒட்டுமொத்த கோலிவுட்டின் பார்வையும் இவ்விரு படங்களின் மீதுதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு படங்களுமே ஏமாற்றம்தான்: ஆனால் இரண்டு படங்களுமே பயங்கரமாக சொதப்பிவிட்டன. மகிழ் திருமேனியை சுதந்திரமாக வேலை செய்யவிடாமல்; அவர் முதலில் சொன்ன கதையை மாற்ற அஜித் சொல்லியதால்தான் படம் படுத்துவிட்டது என்று பேசப்பட்டது. அப்படம் வசூலிலும் பெரிய இம்பேக்ட்டை க்ரியேட் செய்யவில்லை. அடுத்ததாக வந்த குட் பேட் அக்லியும் கதை ரீதியாக பெரிய படம் எல்லாம் ஒன்றும் இல்லை. இதற்கு முன்பு அஜித் ஏற்றிருந்த கேரக்டர்களை எல்லாம் கோர்த்து ஒரு படமாக ஆதிக் கொடுத்திருந்தார். அது ஏகே ரசிகர்களிடம் ஒர்க் அவுட் ஆனாலும் பொதுவான ரசிகர்களிடம் எடுபடவில்லை.

கார் ரேஸில் கவனம்: இது ஒருபக்கம் இருக்க தனது பேஷனான கார் ரேஸில் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார் அவர். துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடந்த ரேஸில் தனது டீமுடன் களமிறங்கி பந்தயம் அடித்த அவர்; இப்போதெல்லாம் பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் இருக்கிறார். ரேஸ் சர்க்யூட்டில் தொடர்ந்து பயிற்சி செய்துவரும்; கண்டிப்பாக இந்தியாவை பெருமைப்படுத்துவார் என்று அவரது ரசிகர்கள் அடித்து கூறுகிறார்கள்.
அடுத்த படம்: கார் ரேஸ் நடக்கும் சமயங்களில் படங்களில் நடிக்கமாட்டேன் என்பது அஜித் எடுத்திருக்கும் முடிவு. அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் குட் பேட் அக்லி போல் இருக்கக்கூடாது என்பதுதான் ரசிகர்களின் ஆசை. ஆதிக்கும் இப்படம் குறித்து, 'இது ஜனரஞ்சகமாக அமையும்' என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இப்படத்தில் யார் யார் பணியாற்றப்போகிறார்கள் என்பது தொடர்பான விவரங்கள் இனி வரும்.
குடும்பத்துடன் ஏகே: நடிப்பு, கார் ரேஸ் என பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்தினருடம் நேரம் செலவழிப்பதில் கவனமாக இருக்கிறார் அஜித். அந்தவகையில் தனது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் உள்ளிட்டோருடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருக்கும் பெருவெம்பா கிராமத்தில் அமைந்திருக்கும் ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு வந்த ரசிகர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
என்ன உருவம் அது?: கோயிலுக்கு வந்த அஜித் மேலாடை அணியாமல் இருந்தார். அப்போது வலது மார்பில் டாட்டூ ஒன்றையும் குத்தியிருந்தார். அதனைப் பார்த்த பிறகு அது என்ன உருவம் என்று பலரும் தேட ஆரம்பித்துவிட்டார்கள். அவர் போட்டிருக்கும் டாட்டு பகவதி அம்மனின் உருவம்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த தெய்வம்தான் அஜித்தின் குல தெய்வம் என்பதும், அடிக்கடி அங்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











