»   »  விக்ரமால் வெளி வரும் பீமா!

விக்ரமால் வெளி வரும் பீமா!

Subscribe to Oneindia Tamil
Vikram with Trisha
விக்ரம், இயக்குநர் லிங்குச்சாமி ஆகியோரின் பேருதவியால்தான் பீமா படம் திரையை எட்டிப் பிடிக்க முடிந்ததாம்.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, லிங்குச்சாமி இயக்க, விக்ரம், திரிஷா நடிக்க உருவாகியுள்ள பீமா, பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

படம் ஆரம்பித்தது முதலே ரத்னத்திற்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். இதனால்தான் நீண்ட காலமாக இப்படம் தயாரிப்பில் இருக்க நேரிட்டு விட்டது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இப்படம் தயாரிப்பில் இருந்தது. இதுவரை விக்ரமின் படம் இந்த அளவுக்கு டிலே ஆனதில்லை என்பதால் விக்ரமே கூட கவலையுடன்தான் இருந்து வந்தார்.

நிதிப் பிரச்சினையால் ஒரு கட்டத்தில் படத்தை டிராப் செய்து விடும் நிலைக்குக் கூட போனார் ரத்னம். இருப்பினும் எப்படியோ தாக்குப் பிடித்து சமாளித்து படத்தை முடித்துள்ளார்.

படத்தை முடித்த பிறகு கடன் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்தனர். கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று நெருக்கினர்.

இதையடுத்து தயாரிப்பாளர் கவுன்சிலை நாடினார் ரத்னம். கடன் வாங்கிய அனைவருக்கும் கண்டிப்பாக பணத்தைத் திருப்பித் தருவதாக கவுன்சில் மூலம் உத்தரவாதமும் கொடுத்தார். இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து யாரும் கோர்ட்டுக்குப் போய் விட வேண்டாம் என பணம் கொடுத்த பைனான்சியர்களை கேட்டுக் கொண்டது தயாரிப்பாளர் கவுன்சில்.

இருப்பினும், டெல்லியைச் சேர்ந்த ஒரு பைனான்சியர் மட்டும் எனது பணத்தைக் கொடுக்காவிட்டால் படத்தை விட மாட்டேன் என்று உடும்புப் பிடியாக இருந்தார்.

இதையடுத்து தனது சொத்து ஒன்றை அடகு வைத்து டெல்லிக்காரரின் கடனை அடைத்து பிரச்சினையை தீர்த்தார்.

இந்த இடத்தில்தான் புது சிக்கல் வந்தது. அதாவது படத்தின் நாயகன் விக்ரமுக்கு ரூ. 1 கோடியே 15 லட்சமும், இயக்குநர் லிங்குச்சாமிக்கு ரூ. 30 லட்சமும் சம்பள பாக்கி தர வேண்டியிருந்தது. அதை எப்படிக் கொடுப்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் ரத்னம்.

இதை அறிந்த விக்ரம், மிகப் பெரிய மனதுடன், தனது சதம்பளத்தை விட்டுக் கொடுப்பதாக ரத்னத்திடம் தெரிவித்தார். முதலில் படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அதேபோல, லிங்குச்சாமியும் தனது பாக்கித் தொகையை தர வேண்டாம் என ரத்னத்திடம் கூறி விட்டாராம்.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சிலில் கடிதமும் கொடுத்துள்ளாராம். இந்த பேருதவியால் நெகிழ்ந்த ரத்னம், விக்ரமை சந்தித்து நன்றி கூறி பாராட்டி நெகிழ்ந்தாராம்.

விக்ரம் இப்படி சம்பளத்தை விட்டுத் தருவது இது 2வது முறை. முதலில் பிதாமகன் படத்தின்போதும் இதேபோல சம்பளப் பாக்கி பிரச்சினை எழுந்தது. பெருந்தன்மையாக அப்போதும் தனது சம்பளத்தை விட்டுத் தந்தார் விக்ரம் என்பது நினைவிருக்கலாம்.

இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி ஒரு வழியாக பொங்கலுக்கு பீமா திரைக்கு வருகிறது. மொத்தம் 300 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளதாம்.

ஒரு காலத்தில் பெரிய பட்ஜெட் படங்களுக்குப் பெயர் போனவர் ஏ.எம்.ரத்னம். வைஜெயந்தி ஐபிஎஸ், இந்தியன், குஷி, தூள், கில்லி என பெரும் வெற்றி பெற்ற படங்களைக் கொடுத்தவர் ரத்னம். ஆனால் ஷங்கரின் பாய்ஸ் படத்தில்தான் அவருக்கு முதல் அடி, அதிலும் பெரிய அடி விழுந்தது.

பாய்ஸ் படத்தால் ரத்னத்திற்கு ரூ. 20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாம். அந்த அடியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. அதை சமாளிக்க ஏகப்பட்ட கடன் வாங்கினார். மகன்கள் ரவி கிருஷ்ணா, ஜோதி கிருஷ்ணாவை வைத்து சில படங்களை எடுத்துப் பார்த்தார். ஆனால் அந்தப் படங்களால் ரத்னத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

சோதனை மேல் சோதனையாக, அவர் கடைசியாக விஜயகாந்த்தை வைத்து எடுத்த தர்மபுரி மகா நஷ்டத்தைக் கொடுத்து ஒரேயடியாக ஊற்றி மூடி விட்டது.

இப்படி அடுத்தடுத்து பேரிடியில் சிக்கித் தவிக்கும் ரத்னத்தை மீட்க பீமா உதவக் கூடும் என்று திரையுலகில் பேச்சு அடிபடுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil