»   »  சந்திரமுகி - 890!

சந்திரமுகி - 890!

Subscribe to Oneindia Tamil


சாந்தி தியேட்டரைப் 'பிடித்திருந்த' சந்திரமுகி ஒரு வழியாக 890 நாட்களைத் தொட்டு விட்டு, வேறு தியேட்டர்களுக்கு இடம் பெயர்ந்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி உலகெங்கும் ரிலீஸானது சந்திரமுகி. வசூலில் பெரும் சாதனை படைத்த படம் சந்திரமுகி. பெரும் ஆரவாரத்துடன் ஓடிய சந்திரமுகி, 7 தியேட்டர்களில் 300 நாட்களைத் தொட்டது.

சென்னை சாந்தி தியேட்டரில் மட்டும் இப்படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் நிகழ்த்திய சாதனையை முறியடிக்கும் வகையில் சந்திரமுகியை தொடர்ந்து ஓட்டி வந்தது சாந்தி தியேட்டர்.

ஒரு வழியாக 800 நாட்களை சந்திரமுகி தொட்டபோது, அதை விழாவாகக் கொண்டாடியது சிவாஜி பிலிம்ஸ். தமிழ் சினிமாவிலேயே அதிக நாட்கள் ஒரே தியேட்டரில் ஓடிய படம் என்ற சாதனை தற்போது சந்திரமுகியிடம் உள்ளது.

800வது நாள் விழாவை சிவாஜி பிலிம்ஸும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்து எடுத்தன. முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரஜினியைப் புகழ்ந்து பேசினார்.

இந்த நிலையில் தற்போது 890 நாட்களைத் தொட்டு விட்டது சந்திரமுகி. இதையடுத்து சாந்தி தியேட்டரிலிருந்து சந்திரமுகி இடம் பெயர்ந்துள்ளது. புதிதாக நடராஜ், மேகலா, ஸ்ரீனிவாசா, லட்சுமி ஆகிய தியேட்டர்களில் சந்திரமுகி திரையிடப்பட்டுள்ளது.

செகண்ட் ரிலீஸாக ஒரு படம், ஒரே ஊரில் அதிக தியேட்டர்களில் வெளியாவதும் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

வரலாறு படைத்த சந்திரமுகி குறித்து நடிகர் பிரபு கூறுகையில், மிக மிகப் பெருமையாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி, எங்களது தியேட்டரில் இத்தனை நாட்கள் ஓடி சாதனையும், சரித்திரமும் படைத்திருப்பதை மிகப் பெருமையான விஷயமாக கருதுகிறோம். கடைசி காட்சி வரை படத்துக்கு நல்ல கூட்டம் வந்தது முக்கியமானது என்றார் சந்தோஷத்துடன்.

லகலகலகலகலக்கிட்டீங்க தலைவா!

Read more about: chandramukhi, chennai, jyothika, rajini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil