»   »  கமல் மீது சரண் ரூ. 2 கோடி புகார்

கமல் மீது சரண் ரூ. 2 கோடி புகார்

Subscribe to Oneindia Tamil
Kamal Hassan with Sneha in Vasool Raja MBBS

தனது படத்தில் நடிக்க கமல்ஹாசன் வாங்கிய ரூ. 2 கோடியைத் திருப்பித் தர உத்தரவிட வேண்டும் அல்லது எனது படத்தில் நடிக்க உத்தரவிட வேண்டும் என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் இயக்குநர் சரண் புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிக்க, சரண் இயக்கிய வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இருவரும் இணைய தீர்மானித்தனர்.

இந்தப் படத்தை சரண் தயாரித்து, இயக்குவது எனவும், கமல் நாயகனாக நடிப்பது எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் திடீரென கமல்ஹாசனுக்குக் கூட தெரியாமல், தயாரிப்புப் பணியிலிருந்து சரண் விலகினார். அவருக்குப் பதில் அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் தயாரிப்புப் பொறுப்பை ஒப்படைத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கமல்ஹாசன், இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாகவும், வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பித் தந்து விடுவதாகவும் சரணிடம் தெரிவித்து விட்டார்.

இதை எதிர்பார்க்காத சரண், கமல்ஹாசனை சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். இருப்பினும் கமல்ஹாசன் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் சரண் புகார் கொடுத்துள்ளார். அதில், கமல்ஹாசன் எனது படத்தில் நடிப்பதற்காக ரூ. 2 கோடி அட்வான்ஸ வாங்கியிருந்தார். அதை அவர் திருப்பித் தரவில்லை. அதை அவர் திருப்பித் தர வேண்டும் அல்லது எனது படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இந்தப் புகார் குறித்து உறுதிப்படுத்திய தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் ராம.நாராயணன், கமல்ஹாசன் மிகப் பெரிய நடிகர். அவர் மீதான புகாரில் உண்மை உள்ளதா என்பதை முதலில் ஆராய்வோம். அதன் அடிப்படையில் முடிவு எடுப்போம் என்றார்.

சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படவுள்ளது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil