»   »  பரட்டையில்(ன்) சிக்கல்!!

பரட்டையில்(ன்) சிக்கல்!!

Subscribe to Oneindia Tamil

தனுஷ் நடித்துள்ள பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்திற்கு சிக்கல் தொடருகிறது. அப்படத்தில் தான் டப்பிங் பேசவில்லை என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளதால் சிக்கல் அதிகரித்துள்ளது.

கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜோகி படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் அப்படம் சிறப்பாக உள்ளதால் தமிழில் மருமகன் தனுஷை வைத்து அப்படத்தைத் தயாரிக்குமாறு பிரபல இயக்குநர் கேயாரை கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ஜோகி படத்தின் உரிமையை வாங்கிய கேயார் அப்படத்தை தனுஷ், மீரா ஜாஸ்மினை வைத்து தயாரித்தார். முதலில் டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் தயாரிப்புக்கு அதிக நாட்கள் கேட்டதால் அவரைத் தூக்கி விட்டு ரஜினிக்குப் பிடித்த சுரேஷ் கிருஷ்ணா இயக்குநராக்கப்பட்டார்.

பின்னர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. படம் முடிவடைந்த நிலையில் புது சிக்கல் எழுந்தது. தனக்கு தர வேண்டிய சம்பளப் பாக்கியை கேயார் தர மறுப்பதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார் தனுஷ். ஆனால் இந்தப் புகாரை மறுத்தார் கேயார்.

இதுதொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் தனுஷ் மற்றும் கேயாரை அழைத்துப் பேசினர். பேச்சுவார்த்தையின் இறுதியில், தனுஷுக்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே பாக்கி உள்ளது. அதை கொடுத்து விடுவதாக கேயார் ஒப்புக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து 26ம் தேதி படம் திரைக்கு வரும் என்று கேயார் அறிவித்தார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. படத்துக்கு தான் டப்பிங் பேசவில்லை என்று தனுஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகர் சங்கத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது எனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறினார். அதை ஏற்று நானும் கணிசமான சம்பளத்தைக் குறைக்க ஒப்புக் கொண்டேன்.

ஆனால் அதைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை. மாறாக, வேறு ஒருவரை வைத்து டப்பிங் பேச விட்டுள்ளனர். டப்பிங்கை முடித்து படத்தை வெளியிட கேயார் முயல்வதாக தெரிகிறது. இந்தப் படத்துக்கு இதுவரை நான் டப்பிங் பேசவில்லை என்பதுதான் நிஜம் என்றார் தனுஷ்.

தான் டப்பிங் பேசவில்லை என்று தனுஷ் கூறியிருப்பதால் பரட்டைக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil