அப்போ ரவி மோகனோட முதல் படம் எது?.. பைசன் தான் முதல் படம்னு சொன்ன துருவ் விக்ரம்.. துவைக்கிறாங்க!
சென்னை: இந்த தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கும் மாரி செல்வராஜின் பைசன் படத்தை பார்க்க மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அந்த படத்தின் ஹீரோ துருவ் விக்ரம் டோட்டலாக காலி பண்ணிடுவார் போல தெரிகிறதே என நெட்டிசன்கள் துருவ் விக்ரமை துவைத்து எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
அப்பா சியான் விக்ரம் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும், இதுவரை அவர் குறித்த எந்தவித ட்ரோல்களும் வராது. மேலும், ஒவ்வொரு படத்திலும், அவரது நடிப்பும், கடின உழைப்பும் கண்டிப்பாக பாராட்டப்படும்.

ஆனால், வாரிசு நடிகரான துருவ் விக்ரம் சமீபத்தில், பைசன் தான் தனது முதல் படம் என்றும் முன்னதாக நடித்த 3 படங்கள் தன்னுடைய படம் இல்லை என்பது போல பேசியது ரசிகர்களையும் அந்த படத்தை உருவாக்கிய இயக்குநர்களையும், பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் இழிவுபடுத்துவதாகவே உள்ளதாக ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
மாரி செல்வராஜ் மீது நம்பிக்கை: இந்த தீபாவளிக்கு பைசன் படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு செல்கின்றனர் என்றால், அது முழுக்க முழுக்க இயக்குநர் மாரி செல்வராஜ் மீதுள்ள நம்பிக்கை தான் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என அவர் இயக்கிய படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று வருவது மட்டுமின்றி மக்களுக்கான படமாகவும் உள்ளது தான் ஹைலைட். தமிழகத்தின் கபடி வீரரின் கதையை பைசன் படமாக மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ள நிலையில், கண்டிப்பாக இந்த தீபாவளிக்கு அந்த படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஓவர் ஆட்டிட்யூட்: ஆனால், அந்த படத்தின் ஹீரோவான துருவ் விக்ரம் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியை விட ஓவர் ஆட்டிட்யூட் காட்டிக் கொண்டிருக்கிறார் என சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். பாலா இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்து வர்மா படத்தில் நடித்த துருவ் விக்ரம் அந்த படம் தனக்கு பிடிக்கவில்லை என மீண்டும் அதே படத்தை கிரிஸய்யா இயக்கத்தில் ஆதித்யா வர்மா எனும் பெயரில் புதிதாக நடித்து வெளியிட்டார். ஆனால், அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. வர்மா படமும் ரிலீஸ் ஆகி ஃப்ளாப் ஆனது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மகான் படம் துருவ் விக்ரமுக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. ஆனால், அந்த படம் ஓடிடியில் வெளியானது.
அப்போ ரவி மோகன்?: முதல் படம் ரீமேக் படம் என்றும் 2வது படம் அப்பா படம் அதில் தனக்கு சின்ன ரோல் தான் என்றும் துருவ் விக்ரம் விளக்கம் அளித்த வீடியோவை ஷேர் செய்து அவரது பேச்சுக்கு சிலர் முட்டு கொடுத்து வரும் நிலையில், அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தில் ஜெயம் ரவியாக அறிமுகமானவர் தொடர்ந்து பல ரீமேக் படங்களில் நடித்து சூப்பர் ஹிட் ஹீரோவாக மாறினார். ரீமேக் படம் முதல் படம் இல்லை என்று சொன்னால், அப்போ ரவி மோகன் எல்லாம் எந்த படத்தை தனது முதல் படம் என சொல்லுவார் என நெட்டிசன்கள் துருவ் விக்ரமை ட்ரோல் செய்து வருகின்றனர். பைசன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றால் அடுத்த முறை இது மாரி செல்வராஜ் படம் என்பாரா? என்றும் கேட்கின்றனர்.


Click it and Unblock the Notifications











