ஒரு நடிகனுக்கு இதைவிட என்ன வேண்டும்.. 15 நிமிடங்கள் அதிர்ந்த கரவொலி.. கண்ணீரில் ’ராக்’கும் கரைந்துவிட்டாரே!
வெனிஸ்: 82வது வெனிஸ் திரைப்பட விழாவில், 'தி ஸ்மாஷிங் மெஷின்' திரைப்படத்திற்கான சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகர் டுவைன் ஜான்சன் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தார். அவரது படமான 'தி ஸ்மாஷிங் மெஷின்' வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த ஒட்டுமொத்த பிரபலங்கள் எழுந்து நின்று 15 நிமிடங்கள் கைதட்ட (Standing Ovation) டுவைன் (ராக்) ஜான்சன் கன்ட்ரோல் பண்ண முடியாமல் கண் கலங்கிவிட்டார்.
'தி ஸ்மாஷிங் மெஷின்' படத்தில் டுவைன் ஜான்சனின் நடிப்பு, அவருக்கு ஆஸ்கர் விருதுக்கான வாய்ப்பைப் பெற்றுத் தரலாம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில், அவர் இருமுறை UFC ஹெவிவெயிட் சாம்பியனான மைக் கெர்ராக நடித்துள்ளார். கெர்ரின் தொழில்முறை வெற்றிகளையும், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மனைவி டான் (எமிலி பிளண்ட்) உடனான சிக்கலான உறவு போன்ற அவரது தனிப்பட்ட போராட்டங்களையும் இப்படம் பேசுகிறது.

படத்தின் இயக்குநர் பென்னி சாஃப்டி, படக்குழுவினருடன் சேர்ந்து மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார். கைதட்டல்கள் தொடர்ந்த நிலையில், பென்னி சாஃப்டி தனது நட்சத்திரங்களான டுவைன் ஜான்சன் மற்றும் பிளண்ட்டை ஆரத்தழுவிக்கொண்டார்.
திரைப்படத்தின் தொடக்கத்திற்கு முன், ஒரு ரசிகர் டுவைன் ஜான்சனின் பிரபலமான WWE வசனமான "Can you smell what the Rock is 'cooking?!" என்று சத்தமாக கேட்க, அது அனைவரையும் சிரிக்க வைத்தது.
82வது வெனிஸ் திரைப்பட விழாவில் ஜார்ஜ் க்ளூனி, ஜூலியா ராபர்ட்ஸ், எம்மா ஸ்டோன் போன்ற பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். டுவைன் ஜான்சன் படத்திற்காக தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் புரஸ்தெடிக்ஸ் அணிய வேண்டியிருந்ததாகக் கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இது மிகவும் உண்மையானது. இவ்வளவு காலமாக நான் இத்தகைய அனுபவத்தைப் பெற்றதில்லை. நான் மிகவும் பயந்தேன், 'இதை என்னால் செய்ய முடியுமா? என்னால் இதைச் செய்ய முடியுமா?' என்று யோசித்தேன்," என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, "இதுபோன்ற வாய்ப்புகள் எனக்குக் கிடைக்காமல் போனதற்கு, இதுபோன்ற விஷயங்களை ஆராய நான் மிகவும் பயந்ததே காரணம் என்பதை உணர்ந்தேன். ஒரு யதார்த்தமான மற்றும் தீவிரமான ஒன்றைச் செய்ய நான் மிகவும் ஆவலாக இருந்தேன். அப்போது 'தி ஸ்மாஷிங் மெஷின்' வந்தது," என்றார்.
'தி ஸ்மாஷிங் மெஷின்' என்பது பென்னி சாஃப்டியின் முதல் தனி திரைப்பட இயக்கம் ஆகும். இப்படத்தில் எமிலி பிளண்ட் மற்றும் பென்னி சாஃப்டி இருவரும் இணைந்துள்ளனர். இவர்கள் இதற்கு முன் கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹெய்மர்' படத்திலும், டுவைன் ஜான்சன் மற்றும் பிளண்ட் 'ஜங்கிள் க்ரூஸ்' படத்திலும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வாங்கியதை போலவே ஹாலிவுட்டின் தற்போதைய நம்பர் ஒன் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான அதிரடி ஆக்ஷன் நடிகர் டுவைன் ஜான்சனும் ஒரு ஆக்ஷன் படத்தில் வாழ்ந்துள்ள நிலையில், ஆஸ்கர் விருதையும் அடுத்த ஆண்டு வெல்வார் என்றும் ஏகப்பட்ட விருதுகள் டுவைன் ஜான்சன் நடிப்புக்கு குவியும் என்றும் ஹாலிவுட் வட்டாரங்கள் பாராட்டி வருகின்றன. பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளை தாண்டி ஒரு நடிகனுக்கு நல்ல நடிகன் என்கிற பாராட்டு தான் முக்கியம் என்பதை ராக்கும் புரிந்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











