»   »  ரஜினி வீடு முன்பு ரசிகர்கள் தர்ணா

ரஜினி வீடு முன்பு ரசிகர்கள் தர்ணா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள், ரஜினியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கோரி ரகளையில் ஈடுபட்டு வீட்டுக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு வந்து செல்கிறார். ரஜினியைப் பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் இங்கு பெரும் திரளாக வந்த வண்ணம் உள்ளனர்.

ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் பெரும் திரளான ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் ரஜினி புன்னகையுன் புகைப்படம் எடுத்து ரசிகர்களை திருப்தியுடன் அனுப்பி வைத்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சந்திக்க விரும்புவதாக ரஜினி விருப்பம் தெரிவித்ததன் பேரில் தாலுகா வாரியாக, மாவட்ட வாரியாக ரசிகர் மன்றத்தினர் சென்னைக்கு வந்து தங்களது தலைவரை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

ரஜினியின் உத்தரவின் பேரில் ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா, மாவட்ட வாரியாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை வரவழைத்து ரஜினியுடன் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.

தன்னை சந்திக்க வரும் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களிடம் சந்தோஷமாக பேசிய ரஜினி, அவர்களின் தொலைபேசி எண்களையும் குறித்துக் கொள்ளும்படி தனது உதவியாளரிடம் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் சந்தோஷம் அடைந்தனர்.

மீண்டும் சந்திக்க விரும்பினால் நானே அழைக்கிறேன் என்றும் ரசிகர்களிடம் கூறி அனுப்பி வைத்தாராம் ரஜினி. மேலும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி கரெக்டாக பெயர் சொல்லி அழைத்ததால், நிர்வாகிகளுக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டதாம்.

மேலும் சென்னைக்கு வந்து போன செலவையும் ரஜினி தருமாறு உத்தரவிட்டுள்ளாராம்.

இந் நிலையில் கோவை மாவட்டத்திலிருந்து வந்த ரசிகர்கள் சிலர் கடந்த 2 நாட்களாக ரஜினியைப் பார்க்க முடியாமல் தவித்துள்ளனர். கல்யாண மண்டப நிர்வாகிகள் சிலர் அவர்களை உள்ளே விடவில்லை என்று தெரிகிறது.

இதனால் கோபமடைந்த அவர்கள் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு விரைந்தனர். அங்கு வீட்டின் முன்பு தர்ணா நடத்தினர். ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள தங்களை அனுமதிக்க வேண்டும் என்ரு கோஷமிட்டனர்.

ஒரு கட்டத்தில் வீட்டின் காவலாளிகளுடன் கடுமையாக வாதிட்ட அவர்கள் கேட்டைத் தாண்டி வீட்டுக்குள் நுழைய முயன்றனர்.

இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரசிகர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் சிறிது நேரம் ரஜினி வீடு உள்ள பகுதியில் பரபரப்பு நிலவியது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil