»   »  தீபாவளிக்கு இந்தி சிவாஜி

தீபாவளிக்கு இந்தி சிவாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தின் இந்திப் பதிப்பு தீபாவளிக்கு வட இந்தியாவில் வெளியாகவுள்ளதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க, ஏவி.எம். தயாரிக்க உருவான சிவாஜி வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. வட இந்தியாவிலும் முதல் முறையாக பாஷை புரியாத பலரும் கூட ரசித்துப் பார்த்தனர் சிவாஜியை.

வட இந்தியாவில் சிவாஜிக்கு கிடைத்த பெரும் வரவேற்பைப் பார்த்த ஏவி.எம். நிறுவனம் சிவாஜியை இந்தி பேச வைத்துள்ளது. சிவாஜி படம் இந்தியில் டப் ஆகியுள்ளது.

சிவாஜி இந்திப் பதிப்பையும் ஏவி.எம். நிறுவனமே வட இந்தியாவில் ரிலீஸ் செய்கிறது. வருகிற தீபாவளிக்கு பிரமாண்ட அளவில் இப்படத்தை இந்திப் பெல்ட்டில் இறக்கி விடுகிறதாம் ஏவி.எம்.

இதுகுறித்து ஏவி.எம். நிறுவன தலைமை செயல் அதிகாரி பாபு கூறுகையில், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட வட மற்றும் மேற்கு மாநிலங்களில் சிவாஜிப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இப்படத்தை இந்தியிலும் டப் செய்துள்ளோம்.

இந்தி ரசிகர்களுக்காக சில காட்சிகளை ரீ ஷூட் செய்யவுள்ளோம். இதில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு வாரம் இதற்காக ஒதுக்குவதாகவும் கூறியுள்ளார் என்றார்.

இந்திப் பதிப்பிலும் ரஜினியே சொந்தக் குரலில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியில் படத்தின் நீளம் குறைக்கப்படுகிறதாம். தற்போது உள்ள 3 மணி நேரத்திற்குப் பதில் இரண்டே முக்கால் மணி நேரமாக குறைக்கப்படவுள்ளதாம். வழக்கமாக இந்தியில் 160 நிமிடங்களுக்கு மேல் படம் போனால் எழுந்து தம் அடிக்கப் போய் விடுவார்களாம்.

தொடர்ந்து பாபு கூறுகையில், ஒரிஜினல் சிவாஜியில் உள்ள பல காட்சிகள் அப்படியே இந்தியிலும் இருக்கும். சில காட்சிகளில் மட்டும் மாற்றம் செய்யப்படும். ரஜினிகாந்த் இப்போது ஒரு சர்வதேச நடிகர். மொழி, வயது, இந்தப் பாகுபாடுகளைத் தாண்டியவராகி விட்டார்.

இந்தியர்கள் மட்டும்தான் என்றில்லாமல் கொரியர்களும், ஜப்பானியர்களும், சீனர்களும் கூட ரஜினியையும், அவரது ஸ்டைலையும் ரசிக்க முடியும் என்றார்.

இந்தி சிவாஜிக்கான வசனங்களை ஸ்வானந்த் கிர்கிரே எழுதுகிறாராம். அக்டோபர் இறுதிக்குள் டப்பிங் வேலைகள் முடிந்து விடுமாம். நவம்பரில், தீபாவளியன்றோ அல்லது தீபாவளிக்கு முன்போ சிவாஜி வெளியாகக் கூடும். இந்திப் பதிப்பை 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனராம்.

சிவாஜியின் தமிழ்ப் பதிப்பு 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தெலுங்குப் பதிப்பு 350க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கேரளாவில் முதல் முறையாக சிவாஜியை 86 தியேட்டர்களுக்கு மேல் திரையிட்டு புதிய சாதனை படைத்தனர். வெளிநாடுகளிலும் கூட சிவாஜி பெரும் ஆரவாரத்தையும், வசூலையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil