»   »  சஞ்சய்தத்தின் முன்னாபாய் -3!

சஞ்சய்தத்தின் முன்னாபாய் -3!

Subscribe to Oneindia Tamil

சஞ்சய் தத்தை வைத்து முன்னாபாய் வரிசையில் இரு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி, மீண்டும் சஞ்சய் தத்தை வைத்து முன்னாபாய் படத்தின் 3ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

தொய்ந்து போய்க் கிடந்த சஞ்சய் தத்தின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படம் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2வது பாகமாக லஹே ரகோ முன்னாபாய் படத்தை இயக்கினார் ராஜ்குமார் ஹிராணி. இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

முன்னாபாய் படத்தின் முதல் பாகம் தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரிலும், சங்கர்தாதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் தெலுங்கிலும், உப்பிதாதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியாகி அங்கும் பெரும் வெற்றியைப் பெற்றன.

இந்த நிலையில் சமீபத்தில் லஹே ரகோ முன்னாபாய் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்து அப்படமும் பெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சஞ்சய் தத்தை வைத்து முன்னாபாய் படத்தின் 3ம் பாகத்தை எடுக்க தீர்மானித்துள்ளார் ஹிரானி. இந்தப் படத்திற்கு முன்னாபாய் சலே அமெரிக்கா என்று பெயரும் சூட்டியுள்ளார் ஹிரானி.

இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாபாய் வரிசையிலேயே இந்தப் படம்தான் சிறந்தது என்று கூறும் அளவுக்கு 3ம் பாகம் சிறப்பாக அமையும்.

இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். இதுகுறித்து சஞ்சய்யிடம் ஏற்கனவே பேசியுள்ளேன். அவருக்கும் எனது கதை பிடித்து விட்டது. இந்தப் படம் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருக்கும்.

முதல் இரு படங்களையும் தயாரித்த விது வினோத் சோப்ராவே இப்படத்தையும் தயாரிப்பார். சஞ்சய் தத் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்ததும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றார் ஹிரானி.

இதற்கிடையே, சஞ்சய் தத் தற்போது சிறையில் இருப்பதால் (தாற்காலிக ஜாமீனில் இன்று வெளியே வருகிறார்) முன்னாபாய் 3க்கு முன்னதாக ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் ஹிராணி. இதில் சஞ்சய் தத் கெஸ்ட் ரோல் செய்கிறாராம்.

தற்போதைய கல்வி முறை குறித்த படமாம் இது. இப்படம் குறித்து ஹிராணி கூறுகையில், எல்லோருமே நல்ல படிப்பு படிக்க வேண்டும், நல்ல எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதை மையமாக வைத்து இப்படம் இருக்கும். இந்தப் படத்தின் மூலம் நகைச்சுவையோடு மக்களுக்கு நல்ல செய்தியையும் தரப் போகிறேன் என்றார் ஹிரானி.

மொத்தத்தில், ஹிரானி ஒரு நல்ல செய்தியாளராக மாறி வருகிறார்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil