»   »  ஹாலிவுட்டில் ரித்திக் ரோஷன்!

ஹாலிவுட்டில் ரித்திக் ரோஷன்!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
ஹாலிவுட் ஹாட் ஸ்டார் பிராட் பிட்டின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பிரில்ஸ்டன் கிரே என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள படம் ஒன்றில் பாலிவுட் டாப் ஸ்டார் ரித்திக் ரோஷன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

க்ருஷ், தூம்-2 ஆகிய படங்கள் மூலம் பாலிவுட்டின் டாப் ஸ்லாட்டுக்கு முன்னேறியவர் ரித்திக் ரோஷன். தற்போது இவரைத் தேடி ஹாலிவுட் வாய்ப்பு வந்துள்ளது. அதுவும், பிராட் பிட்டின் நிறுவனத் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்கும் முதல் பாலிவுட் ஸ்டார் என்ற பெருமையை இதன் மூலம் ரித்திக் ரோஷன் பெற்றுள்ளார்.

பிரில்ஸ்டன் கிரே நிறுவனம், டிராய், சார்லி அண்ட் தி சாக்கலேட் பேக்டரி உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் பிராட் பிட், நத்தாலி போர்ட்மேன், ஆடம் சேண்ட்லர், நிக்கோலஸ் கேஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஏற்கனவே ரித்திக் ரோஷனைத் தேடி பல ஹாலிவுட் வாய்ப்புகள் வந்தன. அதில் பிங் பேந்தர் 2 என்ற படமும் அடக்கம். இருப்பினும் பல்வேறு காரணங்களால் இவற்றை ரித்திக்கால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்தப் புதிய ஹாலிவுட் படத்தின் கதை குறித்து இன்னும் முடிவாகவில்லை. அதுகுறித்து ரித்திக்குடன், கிரே நிறுவனம் ஆலோசனை நடத்திக் கொண்டுள்ளது. பல்வேறு திரைக்கதைகளை அது பரிந்துரைத்துள்ளது. அவற்றை ரித்திக் பரிசீலித்து வருகிறார். விரைவில் கதை முடிவாகும் என்று தெரிகிறது.

ரித்திக்கின் சர்வதேச மேலாளரான ஜெய் கண்ணா இதுகுறித்துக் கூறுகையில், பிராட் பிட் போன்ற மிகப் பெரிய சர்வதேச நடிகருடன் இணைந்து நடிப்பதற்கு ரித்திக் ரோஷன் மிகவும் ஆர்வமாக உள்ளார். மிகச் சிறந்த உடல் அமைப்பும், சிறப்பான நடிப்புத் திறமையும் கொண்ட ரித்திக், பிராட் பிட்டுடன் இணைவது மிகப் பெரிய விஷயம்.

இந்தப் படம் ரித்திக் ரோஷனை சர்வதேச அளவில் மிகப் பெரிய நடிகராக உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ரித்திக்குக்கு இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய கண்டம் முழுவதும் நல்ல ரசிகர் கூட்டம் உள்ளது. ரித்திக்கை அமெரிக்காவில் நடிகராக அறிமுகப்படுத்துவதற்கு பெருமைப்படுகிறோம் என்றார்.

தற்போது ரித்திக் ரோஷன் ஜோதா அக்பர் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அக்பர் வேடத்தில் ரித்திக் நடிக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

Please Wait while comments are loading...