Don't Miss!
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் குழும நிறுவனங்கள்.. எவ்வளவு லாபம் தெரியுமா?
- News
பெருவாரிப்பேர் இன்று ‘சிக் லீவ்’ எடுத்திருப்பாங்க! பின்னே.. இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா.. விடுவோமா?
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஜெயம் ரவி... 10 ஆண்டுகள்.. 15 படங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் ஜெயம் ரவி நடிக்க வந்து 10 ஆண்டுகள் பூர்த்தியாகிறது.
இந்த 10 ஆண்டுகளில் ஜெயம் தொடங்கி ஆதி பகவன் வரை 15 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இவற்றில் 50 சதவீதம் வெற்றிப் படங்கள். மற்றவை சுமார் அல்லது தோல்விப் படங்களே.
வெற்றிப் படங்களில் பெரும்பான்மையானவை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவியின் பத்தாண்டு கால சினிமா பற்றிய ஒரு பார்வை...

ஜெயம்...
லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்துவிட்டு கொஞ்ச நாள் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த ரவியை, ஜெயம் படத்தில் ஹீரோவாக்கினார் அவரது அண்ணன் ராஜா. அவர்களின் அப்பா எடிட்டர் மோகன்தான் தயாரிப்பாளர். படம் பெரிய வெற்றியைப் பெற்றது. நடிப்பில் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றார் ரவி. அன்றுமுதல், ராஜா, ரவி இருவரின் பெயர்களுடன் ஜெயமும் ஒட்டிக் கொண்டது.

குமரன் சன் ஆப் மகாலட்சுமி
ஜெயம் ரவி நடித்த இரண்டாவது படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. கிக் பாக்ஸராக நடித்திருந்தார். அடிப்படையிலேயே அவர் ஒரு மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர் என்பதால் சண்டைக் காட்சிகளில் அநாயாசமாக நடித்திருந்தார். நீண்ட நாள் நடிக்காமல் இருந்த நதியாவுக்கு இந்தப் படம் ரீ என்ட்ரி. நல்ல பொழுதுபோக்குப் படம் என்ற பெயரையும் பெரிய வசூலையும் குவித்தது இந்தப் படம்.

தாஸ்-மழை -இதயத் திருடன்
அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் கொடுத்த ரவிக்கு, தொடர்ந்து மூன்று படங்கள் சரியாக அமையவில்லை. அவற்றில் ரவி கால்பந்து வீரராக நடித்த தாஸ் பெரிய ஓபனிங்கைக் கொடுத்தாலும், தாக்குப் பிடிக்கவில்லை. மழையும், இதயத் திருடனும் தோல்விப் படங்களாகிவிட்டன. இந்த மூன்றுமே வெளி இயக்குநர்கள் இயக்கிய படங்கள்.

உனக்கும் எனக்கும்
இந்த தோல்விகளை ஈடுகட்ட, தம்பியை வைத்து ராஜா இயக்கிய மூன்றாவது படம் உனக்கும் எனக்கும். தெலுங்கில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான படத்தின் ரீமேக். த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தார். இனிய பாடல்கள், கலகலப்பான திரைக்கதை, விவசாயத்தின் பெருமை பேசும் காட்சிகள் என அருமையாக அமைந்தது அந்தப் படம். 2006-ல் வெளியான படங்களில் பெரிய வசூலைக் குவித்த படம் இது.

தீபாவளி
எழில் இயக்கத்தில் ஜெயம் ரவி - பாவனா நடித்த படம் தீபாவளி. வடசென்னை இளைஞன் பில்லுவாக நடித்திருந்தார் ரவி. லிங்குசாமி தயாரித்த இந்தப் படம் 100 நாள் ஓடியதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், வசூலில் பெரிதாகப் போகவில்லை.

சந்தோஷ் சுப்ரமணியம்
மீண்டும் ரவியும் - ராஜாவும் கூட்டணி அமைத்த படம் சந்தோஷ் சுப்ரமணியம். தெலுங்கில் வெளியான பொம்மரிலு ரீமேக். 2008-ல் வெளியான படங்களில் மிகச் சிறந்த படமாக பாராட்டப்பட்டது சந்தோஷ் சுப்ரமணியம். அனைவரும் ரசித்து பார்க்கக் கூடிய ஒரு நல்ல தரமான குடும்பப்படமாக அமைந்தது.

தாம் தூம்
இந்தப் படத்தை இயக்கிய ஜீவா இடையிலேயே இறந்துவிட, அவரது உதவியாளர் மணிகண்டன் படத்தை முடித்தார். பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டிருந்தன. ஜெயம் ரவியை நல்ல ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டிய படம் இந்த தாம் தூம்.

பேராண்மை
ஜெயம் ரவி நடித்த படங்களில் மிகச் சிறந்த படம் என்று பேராண்மையைச் சொல்லலாம். எஸ் பி ஜனநாதன் இயக்கிய இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் பாராட்டப்பட்டது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி துருவன் என்ற பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் ரவி. வசூலிலும் வெற்றியைப் பெற்ற படம் இது.

தில்லாலங்கிடி
ரவி - ராஜா கூட்டணியில் வெளியான 5வது படம் இது. தெலுங்கில் வெளியான கிக் படத்தின் ரீமேக். ரவி - வடிவேலு காமெடி படத்தை கலகலப்பாக ரசிக்க வைத்தது. ஆனால் ரவி - ராஜா கூட்டணியில் அதற்கு முன் வந்த படங்களோடு ஒப்பிட்டால் இது சுமாரான வெற்றிப் படம்தான்.

எங்கேயும் காதல்
பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த முதல் படம் எங்கேயும் காதல். பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட்ட படம். இனிமையாக பாடல்கள், கவர்ச்சியான ஹன்சிகா என எல்லாம் இருந்தும் எடுபடாமல் போன படம் இது.

அமீரின் ஆதி பகவன்
ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்து வந்த சமீபத்திய படம் இது. அமீர் இயக்கத்தில் நீண்டநாட்களாக கிடப்பிலிருந்து இந்த ஆண்டு வெளியானது. ஜெயம் ரவியின் படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது என்று மட்டுமே சொல்ல முடிந்தது. அமீர், ரவி இருவருக்குமே இந்தப் படத்தால் நல்ல பெயரில்லை.

அடுத்து...
அடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார் ரவி. இவற்றில் பூலோகம் படத்தை கல்யாண் கிருஷ்ணா இயக்குகிறார். சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்தப் படங்களுக்குப் பிறகு மீண்டும் தன் அண்ணன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் ரவி.

நன்றி...
திரையுலகில் தனது பத்தாண்டு நிறைவு குறித்து ஜெயம் ரவி கூறுகையில், 'ஜெயம் படம் மூலம் நடிக்க வந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எல்லோருடைய ஆதரவாலும் கிடைத்த கவுரவம் இது. எல்லோருக்கும் நன்றி," என்றார்.