»   »  ஜெயம் ரவியும், ஐந்து அழகிகளும்!

ஜெயம் ரவியும், ஐந்து அழகிகளும்!

Subscribe to Oneindia Tamil

ஐந்து அழகிய நாயகிகளுடன் ஜெயம் ரவி ஜோடி போடும் வித்தியாசமான ஒரு படத்தைக் கொடுக்கவிருக்கிறார், இயற்கை, ஈ பட இயக்குநர் ஜனநாதன்.

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வித்தியாசமான இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். அவர் இயக்கத்தில் முதலில் வெளிவந்த இயற்கை பெரும் வரவேற்பைப் பெற்றது. கமர்ஷியலாக இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அழகான படமாக வரவேற்கப்பட்டது, பாராட்டு பெற்றது.

அடுத்து ஜீவாவை வைத்து ஜனநாதன் இயக்கிய ஈ பெரும் வசூலை அள்ளிக் கொடுத்து ஜனநாதனால் பாப்புலர் கதையையும் படமாக்க முடியும் என்பதை நிரூபிக்க உதவியது.

இந்த நிலையில் அடுத்து ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் ஜனநாதன். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஐந்து ஜோடிகளாம்.

உண்மையில் இந்தக் கதையை கமல்ஹாசனுக்காகத்தான் எழுதினாராம் ஜனநாதன். ஆனால் கமல், தசாவதாரத்தில் பிசியாக இருப்பதால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்தே ஜெயம் ரவியை தனது நாயகனாக்க முடிவு செய்தாராம் ஜனநாதன்.

இது என்ன மாதிரியான படம் என்று ஜனநாதனிடம் கேட்டபோது இது வழக்கமான படமாக இருக்காது. தமிழ் சினிமா ரசிகர்களுக்காக ஒரு புதுமையான உத்தியைக் கடைப்பிடித்து வித்தியாசமான படத்தைக் கொடுக்கப் போகிறேன்.

கன மழை பெய்யும் அடர்ந்த காடுகளில் இப்படத்தை படமாக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.

இந்தப் படத்தின் லொகேஷன்களை தேர்வு செய்வதற்காக சமீபத்தில் ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு விசிட் அடித்தார் ஜனநாதன். அவருடன் கேமராமேன் ஏகாம்பரமும் சென்றிருந்தார்.

அதேபோல ஐந்து நாயகியர்களை தேர்வு செய்யும் முயற்சியிலும் ஜனநாதன் பிசியாக உள்ளார். அய்ங்கரண் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தின் முதல் எழுத்து உ என்று ஆரம்பிக்குமா ஜனநாதன் சார்?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil