»   »  அவார்டு கிடைக்கும் - ஜீவா நம்பிக்கை!

அவார்டு கிடைக்கும் - ஜீவா நம்பிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil


கற்றது தமிழ் படத்தில் எனது நடிப்புக்கு நிச்சயம் அவார்டு கிடைக்கும் என்று சந்தோஷம் கலந்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார் ஜீவா.

Click here for more images

தமிழ் சினிமாவின் வளரும் ஸ்டார்களில் ஒருவரான ஜீவா, மெல்ல மெல்ல ஹிட் பட நாயகனாக மாறி விட்டார். தொடர்ந்து ஹிட் படங்ளைக் கொடுத்து வரும் ஜீவா, நல்ல நல்ல கேரக்டர்களாகத் தேடித் தேடி நடிக்கிறார்.

தற்போது கற்றது தமிழ் (முன்பு தமிழ் எம்.ஏ) படத்தில் நடித்து முடித்துள்ள ஜீவா, படம் சிறப்பாக வந்துள்ளதாக சந்தோஷமாக கூறுகிறார்.

ராம் படத்தின் மூலம் சிறந்த நடிகராக அறியப்பட்டவர் ஜீவா. அதற்கு முன்பு வரை அவர் நடித்த படங்கள் சுமாராகவே இருந்தன. ஆனால் ராம், அவரை சூப்பர் நடிகராக உயர்த்தி விட்டது.

கற்றது தமிழ் குறித்து தேவி ஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்து பகிர்ந்து கொண்டார் ஜீவா. அதிலிருந்து சில துளிகள் ...

கற்றது தமிழ் குறித்து ..?

இது ஒரு உண்மைக் கதை. எம்.ஏ. தமிழ் படித்த ஒரு இளைஞன் வேலையின்றிக் கஷ்டப்படும் கதையை சொல்லியுள்ளோம். படித்துப் பட்டம் பெற்ற அவன் வேலை கிடைக்காமல், சமூகத்தின் புறக்கணிப்பால் தவறான பாதைக்குச் செல்கிறான்.

இத்தனைக்கும் காரணம், அவன் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதுதான் காரணம். அரசுக் கல்லூரி கூட அவனைப் புறக்கணிக்கிறது. இதில் பிரபாகரன் என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். தமிழ் மொழியின் உயர்வுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள கேரக்டர்தான் பிரபாகரன்.

இப்படத்தில் எனது கேரக்டர் மூன்று கால கட்டங்களில் வருவதாக அமைத்துள்ளார் இயக்குநர் ராம். இதில் மூன்று விதமான கெட்டப்களில் நான் வருகிறேன். இப்படத்துக்காக 12 கிலோ எடையைக் குறைத்து நடித்தேன்.

இது தமிழில் எனது எட்டாவது படம். ஆனால் நான் நடித்ததிலேயே இதுதான் சிறந்த படம் என்று அடித்துக் கூறுவேன். கற்றது தமிழ் எனக்கு மிகப் பெரிய படம். 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் தமிழ் சினிமாவுக்கும் இது சிறந்த படமாக அமையும்.

படம் முடிந்து விட்டதா ..?

கடந்த மாதமே முடிந்து விட்டது. செப்டம்பர் இறுதியில் திரையிடத் தீர்மானித்திருந்தோம். ஆனால் ஆடியோ வெளியீடு தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சினைகளால் படம் திரைக்கு வருவது தாமதமாகியுள்ளது. அக்டோபர் 5ம் தேதி படம் திரைக்கு வருகிறது. தமிழகத்தில் இப்படத்தை நடிகர் கருணாஸ் திரையிடுகிறார்.

கற்றது தமிழ், அனுபவங்கள் ..

நல்ல வித்தியாசமான கதை. ஒரு வருடம் இப்படத்தில் நடித்துள்ளேன். மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, சென்னை உள்பட பல பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

படப்பிடிப்பு நாட்களில் தினசரி அதிகாலையிலேயே நான் எழுந்து விடுவேன். எனது முகத்தில் தாடியை ஒட்ட ஆரம்பிப்பார்கள். அது ரொம்ப கஷ்டமான வேலை. இனிமேல் இப்படி தாடி வைத்துக் கொண்டு நடிக்கவே கூடாதப்பா என்று நினைக்கும் அளவுக்கு ரொம்பக் கஷ்டத்தைக் கொடுத்தது அந்த தாடி (சிரிக்கிறார்)

புது நாயகி அஞ்சலி எப்படி ..?

அஞ்சலி புது முக நாயகி. அடுத்த வீட்டுப் பெண் போல இயல்பான தோற்றம். படத்தில் இயல்பாக நடித்துள்ளார். படம் முழுக்க அவரது கேர்கடரும் வரும், அவரும் பேசப்படுவார்.

தனிப்பட்ட முறையில் எனக்கு அஞ்சலியைப் பற்றித் தெரியாது. அதுகுறித்து நான் அக்கறை காட்டுவதும் இல்லை. இதுபோல நான் இருப்பதால்தான் வதந்திகளில் கூட சிக்குவதில்லை.

கற்றது தமிழ் படத்தின் பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இதயத்தை வருடும் வகையில் ட்யூன் அமைத்துள்ளார். அவரது இசையமைப்பு என்னை பிரமிக்க வைத்தது.

உங்களுக்கு இதில் விருது கிடைக்குமா ..?

இப்படம் தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு டிரெண்ட் செட்டராக அமையும். தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியமைக்கும்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இதை திரையிடத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அப்போது பட வேலைகள் முடியாததால் முடியவில்லை. படத்தைப் பார்த்த பின்னர் நிச்சயம் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. அதற்குப் பொருத்தமான கதைதான் இது. எனக்கு மட்டுமல்லாது இப்படத்துக்கும் பல விருதுகள் கிடைக்கும் என்றார் நம்பிக்கையோடு.

தமிழுக்கு விருது கிடைத்தால் எல்லோருக்கும் சந்தோஷம்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil