»   »  5 ராணிகளும், லக்கி ஜீவனும்!

5 ராணிகளும், லக்கி ஜீவனும்!

Subscribe to Oneindia Tamil

ஐம்பெரும் நாயகிகளுடன் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது என்பது சுகானுபவமான விஷயம் அல்ல, ரொம்ப கஷ்டமான காரியம் என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறார் ஜீவன்.

அந்தக் காலத்து ராஜாக்கள் கதையை நாம் கேட்டிருப்போம். இப்போதெல்லாம் பத்துக்குப் பத்து பெட்ரூம்தான் இக்காலத்தினருக்கு அந்தப்புரம். ஆனால் அக்காலத்தில் எல்லாம், பெரிய பெரிய மாளிகையையக் கட்டி வைத்து பல ராணிகளுடன் ராஜாக்கள் கும்மாளம் போட்டு குதூகலிப்பார்களாம்.

அந்தப்புரத்திற்குள் நுழைந்து விட்டால், எந்தப் புறம் பார்த்தாலும் ஏதாவது ஒரு ராணி தேவதை போல சுற்றிக் கொண்டிருப்பார். அப்படிப்பட்ட அழகிய தேவதைச் சோலையில் ராஜாக்கள் ஜாலி செய்த அனுபவங்களை நாம் புத்தகங்களில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த சுகானுபவத்தை ஜீவன், நான் அவனில்லை படத்தில் தற்காலிகமாக அனுபவித்துள்ளார்.

நான் அவனில்லை படத்தில் ஜீவன்தான் நாயகன். அவருக்கு ஜோடிகளாக நமீதா, சினேகா, ஜோதிர்மயி, மாளவிகா, கீர்த்தி சாவ்லா என ஐந்து நாயகிகள்.

அந்த மகானுபவம் பற்றிச் சொல்லுங்களேன் என்று ஜீவனிடம் சிலாகிப்போடு கேட்டோம்.

அய்யோ, நான் அப்படி ஆட்டம் போடும் நாயகன் இல்லை சாரே. பணம் சம்பாதிக்கவும், ஜாலி செய்யவும் நான் சினிமாவுக்கு வரவில்லை. எனக்கும், எனது தலைமுறைக்கும் போதுமான பணத்தை எனது அப்பா சேர்த்து வைத்துள்ளார். எனவே பணம் எனக்குப் பெரிதில்லை.

நான் எம்.பி.ஏ முடித்தவுடன், லண்டனில் நடிப்புக் கல்லூரியில் டிப்ளமோ படித்தவன். நடிப்பின் மீது தீராத தாகம் கொண்டுதான் தமிழ் சினிமாவுக்கே வந்தேன்.

திருட்டுப் பயலே வந்த பிறகு எனக்கு 12க்கும் மேற்பட்ட படங்கள் வந்தன. ஆனால் நான் நல்ல கதையாக இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்வது என்று பிடிவாதமாக இருந்தேன். அதனால்தான் திருட்டுப் பயலேவுக்குப் பிறகு எனக்கு பெரிய இடைவெளி விழுந்து விட்டது.

நீங்க வேற எதுவோ கேட்டிங்கள்ல? சொல்றேன். கிளாமர் நாயகிகளுடன் நடிப்பது சுலபமான, ஜாலியான வேலை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு ஈசியானதல்ல.

ஐந்து நாயகிகள் என்பதால் எனக்குப் பொருத்தமானவர் யார் என்பது சரியாக தெரியாமல் குழம்பியிருக்கிறேன். ஐவரில் யார் சூப்பர் என்று கேட்டால் என்னால் பதில் தர முடியாது.

ஒரு நடிகராக இல்லாமல், ஐந்து கிளாமரான நாயகிகளைப் பார்ப்பது பரவசமான விஷயம்தான். ஆனால் ஒரு நடிகனுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும்.

ஐந்து நாயகிகள் என்பதால் ரசிகர்களின் பார்வை அவர்கள் மீதுதான் இருக்கும். ஆனால் அதையும் மீறி என்னை நிலை நிறுத்திக் கொள்ள நான் பிரயத்தனப்பட்டிருக்கிறேன், கடுமையாக முயற்சித்திருக்கிறேன்.

ஐவரில் யார் பெஸ்ட்?

அய்யோ, கஷ்டமான கேள்வியை கேட்டுட்டீங்களே. ஐந்து பேருக்குமே நடிப்பில் தனித் தனி ஸ்டைல் உள்ளது. சினேகா, ஜோதிர்மயி, நமீதா, மாளவிகா, கீர்த்தி என ஐந்து பேருமே தங்களது ஸ்டைலில் கலக்கியுள்ளனர்.

எனவே கோடை வெப்பத்துக்கேற்ற குளிர்ச்சியான விருந்தாக இந்தப் படம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை என்று மர்மப் புன்னகையுடன் பேச்சை முடித்தார் ஜீவன்.

நடிப்பில் மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் வித்தியாசமானவராக இருக்கிறார் ஜீவன். இவருக்கென்று பி.ஆர்.ஓ, மேனேஜர் என யாரும் இல்லை. இவரே அனைத்து டீலிங்கையும் கவனித்துக் கொள்கிறார்.

ஏன் இப்படி என்று கேட்டால், எனக்குப் பணம் சம்பாதிக்கும் ஆசை இல்லை சார். நல்ல படங்களில் நடிக்கவே ஆர்வமாக உள்ளேன். அதற்கு பி.ஆர்.ஓ, மேனேஜர் என யாரும் தேவையில்லையே என்றார் கூலாக.

ஆமாமாமா தேவையில்லைதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil