For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் சாம்பார் இல்லை-ஜீவன்

  By Staff
  |

  தொடர்ந்து நல்லவனாகவே நடித்துக் கொண்டிருந்தால் மக்கள் சாம்பார் என கூறி விடுவார்கள். ஆனால் அந்தப் பெயரை சம்பாதிக்க நான் விரும்பவில்லை என்கிறார் ஜீவன்.

  யுனிவர்சிட்டி என்ற படத்தில் முகம் மறைக்கும் முடியுடன் வந்து போனவர் ஜீவன். அந்தப் படத்தில் லேசாக கவனிக்கப்பட்டாலும் கூட, காக்க காக்க படம்தான் ஜீவனுக்கு ஜீவன் கொடுத்தது.

  வில்லனாக அமர்க்களப்படுத்திய அவருக்கு அதைத் தொடர்ந்து நிறைய வில்லன் வேட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் அம்பி படு சுதாரிப்பாக இருந்து, நடித்தால் ஹீரோ வேடம்தான் என்று பிடிவாதமாக இருந்தார்.

  இந்த நேரத்தில்தான் வந்தது திருட்டுப் பயலே பட வாய்ப்பு. இது நெகட்டிவ் ரோலாக இருந்தாலும் துணிந்து செய்தார் ஜீவன். மார்க்கெட்டில் நிமிர்ந்து நிற்க இது உதவியது.

  இதையடுத்து இப்படிப்பட்ட வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்தார் ஜீவன். அதன் அடிப்படையில்தான் நான் அவனில்லை படத்தில் பிளேபாய் கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

  இதெல்லாம் பொம்பளையாள்களுக்குப் பிடிக்காதேப்பா என்று ஜீவனிடம் போய் கேட்டால் அவர் வித்தியாசமான பதிலைச் சொன்னார். பாஸ் இப்போதெல்லாம் பெண்களுக்கு இதுபோன்ற வில்லத்தனமான கேரக்டர்களைத்தான் அதிகம் பிடிக்கிறது.

  ரப் அண்ட் டப் கேரக்டர்களில் நடிப்பவர்களைத்தான் பெண்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் பெண்களின் மன நிலை மாறி விட்டதே இதற்குக் காரணம் என நினைக்கிறேன்.

  நிஜ வாழ்க்கையிலும் கூட நல்லவனாக இருப்பவர்களை விட அடிதடியான, வீர தீரமான, சேட்டைகள் செய்பவர்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள் பாஸ். நல்லவனாக மட்டுமே இருப்பவர்களை சாம்பார் என்று கூறி விடுகிறார்கள். எனக்கு அந்தப் பெயர் வேண்டாம் அய்யா.

  இளைஞர்கள் என்றால் வீர தீரமாக இருக்க வேண்டும். குண்டக்க மண்டக்க எதையாவது செய்ய வேண்டும். அதுதான் ஹீரோயிஸம் என்று பெண்கள் நினைக்கிறார்கள்.

  பில்லா போன்ற படங்களும், திருட்டுப் பயலே போன்ற படமும் வெற்றி பெற்றதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று பி.எச்.டிதனமாக பேசினார் ஜீவன்.

  இவ்வளவு பேச்சையும் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போதுதான் கொட்டினார் ஜீவன். இதுதான் அவரது திரையுலக வாழ்க்கையில் முதல் பிரஸ் மீட்.

  செய்தியாளர்களிடன் கேள்விக்கனைகளை லாவகமாக சந்தித்த ஜீவன், பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது எப்படி பேசுவது என்று கூட எனக்குத் தெரியாது (ஆமா, இதுக்கெல்லாம் வகுப்பா எடுக்க முடியும்).

  எனக்கு சுய விளம்பரத்தில் நம்பிக்கை கிடையாது (நிறைய பேருக்கு இதுதானே ராசா பொழப்பா இருக்கு). இருந்தாலும் என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே உங்களை சந்திக்க முடிவு செய்தேன்.

  வதவதவென படங்களை வாரிப் போட்டுக் கொள்ளும் ரகம் இல்லை நான். திருட்டுப் பயலே படத்துக்குப் பிறகு நிறைய படங்கள் வந்தன. ஆனால் எதுவுமே என்னைக் கவரவில்லை. நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். நான் அவனில்லை வந்தது.

  கே.பாலச்சந்தர் சார் இயக்கிய இப்படத்தை ரீமேக் செய்வது நல்ல விஷயமா, இல்லை முட்டாள்தனமா என்று என்னிடம் கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.

  எனக்கு அந்தக் கதை பிடித்திருந்தது. அதில் நல்ல மெசேஜ் உள்ளது. ஜெமினி சார் நடித்த அந்த கேரக்டர் எனக்கும் பொருந்தி வருவதாக தோன்றியது. எனவேதான் இயக்குநர் செல்வா என்னிடம் கதையைச் சொன்னபோதே அதில் ஒன்றிப் போய் விட்டேன்.

  ஹீரோக்களை விட ஆண்டி ஹீரோக்களுக்கு மக்களிடம் நல்ல ரீச் இருக்கும், வரவேற்பும் பலமாகவே இருக்கும் என்றார் ஜீவன்.

  நான் அவனில்லை படத்தில் பாரின் ரிட்டர்ன், சன்னியாசி, பெயிண்டர், பிசினஸ் எக்சிகியூட்டிவ், பிளேபாய் என ஐந்து கெட்டப்களில் வருகிறாராம் ஜீவன். ஏப்ரல் 20ம் தேதி (அதாவது ஐஸ்வர்யா ராய் கல்யாண நாளன்று) நான் அவனில்லை திரைக்கு வருகிறதாம்.

  இந்தப் படத்தை முடித்து விட்டு மச்சக்காரன் என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ஜீவன். இதிலும் முரட்டுத்தனமான ஆண்டி ஹீரோ வேடம்தானாம்.

  பின்னு ராசா!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X