தனுஷுக்கு சிவகார்த்திகேயன் சட்டை துவைக்கணுமா?.. அவசியம் இல்லை.. பிரபலம் பளார்
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மதராஸி, அமரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதிலும் அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது. இது ஒருபக்கம் இருக்க தனுஷுக்கு எதிராக எஸ்கே செயல்படுகிறார் என்ற பேச்சுக்களும் சமீபமாக அடிக்கடி எழுகின்றன.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும், அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டும் இருந்த சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அழைத்து வந்தது தனுஷ். தான் ஹீரோவாக நடித்த 3 படத்தில் முக்கியமான ரோலை கொடுத்து; பிறகு அவரை ஹீரோவாக வைத்து எதிர்நீச்சல் திரைப்படத்தையும் தயாரித்தார். அந்தப் படம் ஒரு ஹீரோவாக வளர்வதற்கு எஸ்கேவுக்கு ரொம்பவே உதவியாக இருந்தது.
இரண்டு பேருக்கும் விரிசல்?: தொடர்ந்து தனது திறமையை வளர்த்து படங்களில் நடித்து ஹிட் கொடுத்த எஸ்கே இப்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறியிருக்கிறார். விஜய்யும் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் அவர் இடத்தை சிவாதான் பிடிப்பார் என்று பலரும் ஆரூடம் கூறுகிறார்கள். எஸ்கேவும் அதற்கேற்றபடிதான் தனது கிராஃபை கொண்டு சென்றுகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தனுஷுக்கும், எஸ்கேவுக்கும் விரிசல் வந்துவிட்டதாகவும் பேச்சுக்கள் ஓடுகின்றன.

எஸ்கேவின் பேச்சு: அதற்கு உதாரணமாக கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவா பேசியதை சிலர் மேற்கோள் காட்டினார்கள். அதாவது அந்த மேடையில், "நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கமாட்டேன்" என சிவா பேசினார். அந்தப் பேச்சு மறைமுகமாக தனுஷை தாக்கியதுதான் என ரசிகர்கள் கூற ஆரம்பித்தார்கள். இது போதாது என்று கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக அயலான் படத்தையும் களமிறக்கினார் எஸ்கே.
தனுஷின் மேனேஜர் பேச்சு: சூழல் இப்படி இருக்க தனுஷ் நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. அண்மையில்தான் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அப்போது பேசிய தனுஷின் மேனேஜர், 'தனுஷால் வளர்ந்தவர்கள் எல்லாம் அவருக்கு எதிராக வேலை செய்கிறார்கள்' என கூறினார். அந்தப் பேச்சு சிவகார்த்திகேயனுக்குத்தான் என்று வழக்கம்போல் ஒருதரப்பினர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளரான அந்தணன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "இதெல்லாம் பார்க்கும்போது ரொம்பவே வேடிக்கையாக இருக்கிறது. காலம் முழுக்க தனுஷுக்கு சிவகார்த்திகேயன் சட்டையை துவைத்து கொடுத்து, அயர்ன் செய்து கொடுக்க வேண்டுமா. சிவாவுக்கு தான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று தனுஷும் எந்த இடத்திலும் சொல்லவில்லையே. தனுஷ் அவர் பாதையில் போகிறார்; சிவகார்த்திகேயன் அவர் பாதையில் போகிறார். இரண்டு பேரையும் முடிச்சு போடுவது தேவையில்லாத ஒன்று" என்றார்.


Click it and Unblock the Notifications











