JR NTR: அடக்கடவுளே.. மேடையிலிருந்து தவறி விழுந்த ஜூனியர் என்டிஆர்.. சிறு காயத்துடன் தப்பினார்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட 'ஆர்.ஆர்.ஆர்' நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது சிறிய காயமடைந்தார். சி.எம்.ஆர் விளம்பரப் படப்பிடிப்பின் போது மேடையிலிருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. ஆனால், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் குழுவினர் உடனடியாக இந்த நிலைமையை தெளிவுபடுத்தினர். " நடிகர் என்.டி.ஆர் இன்று ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது சிறிய காயமடைந்தார். மருத்துவ ஆலோசனைப்படி, அவர் அடுத்த சில வாரங்களுக்கு ஓய்வெடுப்பார். அவரது நிலை சீராக உள்ளது, கவலைப்படத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்," என்று அவரது குழு ஊடகங்களுக்குத் தெரிவித்தது. இருப்பினும், மேலதிக விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.

தற்போதுவரை, ஜூனியர் என்.டி.ஆர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அவரது குழுவினர், இது ஒரு தற்காலிக பின்னடைவு மட்டுமே என்றும், தீவிரமான காயம் இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளனர். அவருடைய ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரங்கள் மற்றும் பரபரப்பான படப்பிடிப்பு ஷெட்யூலை பார்க்கும் ரசிகர்கள், தங்கள் விருப்பமான நட்சத்திரம் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என வேண்டி வருகின்றனர்.
இதற்கிடையில், ஜூனியர் என்.டி.ஆருக்கு அடுத்தடுத்து பல படங்கள் கைவசம் உள்ளன. கடைசியாக அவர் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து அயன் முகர்ஜி இயக்கிய 'வார் 2' படத்தில் நடித்தார். ஆகஸ்ட் 15 அன்று வெளியான இந்தப் படம், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் தொடரின் ஒரு பகுதியாகும். பாலிவுட்டில் அறிமுகமான ஜூனியர் என.டி.ஆருக்கு முதல் படம் அவர் எதிர்பார்த்த மாதிரி வெற்றிகரமாக அமையவில்லை.
தற்போது, பிரசாந்த் நீல் இயக்கும் 'என்.டி.ஆர் நீல்' (டிராகன்) என்று தற்காலிகமாக அழைக்கப்படும் பெயரிடப்படாத படத்திலும் என்.டி.ஆர் நடித்து வருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் எர்னேனி, ரவி ஷங்கர் யலமஞ்சிலி, மற்றும் ஹரி கிருஷ்ணா கோசரசு ஆவர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் புவன் கௌடா மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் சலபதி போன்ற நீலின் வழக்கமான குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
உலகம் முழுவதும் ஜூன் 25, 2026 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 'என்.டி.ஆர் நீல்' வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











