»   »  சென்னையில் கபாலி வசூல்... ரூ 11.43 கோடி.. அதாவது டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்ட விலையில்!

சென்னையில் கபாலி வசூல்... ரூ 11.43 கோடி.. அதாவது டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்ட விலையில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படம் கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு இந்திய சினிமா வரலாறு காணாத வரவேற்பும், ஓபனிங்கும் அமைந்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து அரங்குகளிலுமே கபாலிதான் முதல் நான்கு நாட்கள் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள 90 சதவீத அரங்குகளில் கபாலியே வெளியானது.

முதல் மூன்று நாட்களும் டிக்கெட் விலை ரூ 1000 தொடங்கி ரூ 500 வரை விற்கப்பட்டது. முதல் மூன்று நாட்களுக்குள் இந்தப் படம் ரூ 150 கோடியை உலகெங்கும் வசூலித்து தனி சாதனைப் படைத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


Kabali Chennai collection Rs 11.44 cr

சென்னையில் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் வரலாறு காணாத வசூல் கபாலிக்குக் கிடைத்தது. சத்யம் போன்ற மல்டிப்ளெக்ஸ்களில் இந்தப் படத்துக்கான டிக்கெட்டுகள் நியாயமான விலையில் விற்கப்பட்டன. சில மல்டிப்ளெக்ஸ்களில் டிக்கெட் விலையோடு, காம்போ என்ற பெயரில் கோக் - பாப்கார்னுக்கும் சேர்த்து ரூ 300 வரை வசூலித்தனர்.


ஒற்றைத் திரைகள் கொண்ட சில அரங்குகளில் ரூ 1000, 500 என கவுன்ட்டரிலேயே டிக்கெட் விற்றார்கள்.


இன்னொரு பக்கம், பெரும்பாலான சென்னை தியேட்டர் டிக்கெட்டுகள் ப்ளாக் செய்யப்பட்டு, பெரும் தொகைக்கு விற்கப்பட்டன. இவற்றின் சராசரி விலை ரூ 500 ஆக இருந்தது.


இந்த நிலையில் கபாலி வசூல் குறித்து ஆங்காங்கே சில முரணான தகவல்களை, அதன் விநியோகஸ்தர் என்று கூறிக் கொண்ட ஓரிருவர் தெரிவித்தனர். அதே நேரம் மதுரை, தென்னாற்காடு உள்ளிட்ட பல பகுதி விநியோகஸ்தர்களும் கபாலி பெரிய வெற்றி, தங்களுக்கு லாபம் தந்த படம் என்று கூறியிருந்தனர்.


இந்த சூழலில் கபாலி வசூல் விபரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கலைப்புலி தாணு. சென்னையில் இந்தப் படம் ரூ 11.44 கோடியை வசூலித்துள்ளதாக இன்று நாளிதழ் விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது, டிக்கெட்டுகளில் அச்சடிக்கப்பட்டுள்ள ரூ 120, 90, 70, 50, 30, 10 கட்டணத்தின் அடிப்படையில் காட்டப்பட்டுள்ள வசூல் தொகை இது என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் தரப்பில். அப்படியெனில் கபாலியின் உண்மையான வசூல் என்னவாக இருக்கும்?


டிக்கெட் புக்கிங்கில் ஓரளவு வெளிப்படைத் தன்மை கொண்ட சென்னையில் இந்த நிலை என்றால், முழுக்க முழுக்க ரகசியக் கணக்காகவே இருக்கும் பிற பகுதிகளின் வசூல் எப்படி இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா ரசிகர்களே!!

English summary
This is official... Kalaipuli Thaanu has announced that Kabali has collected Rs 11.44 cr in Chennai city alone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil