»   »  தசாவதாரம் என் கதை: கமல்

தசாவதாரம் என் கதை: கமல்

Subscribe to Oneindia Tamil

தசாவதாரம் படத்தின் கதை என்னுடைய கற்பனையில் உருவானது. எனவே படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் நடித்து வரும் தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி தாம்பரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தசாவதாரம் படத்தை திரையிட இடைக்காலத் தடை விதித்தது. மேலும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

கமல்ஹாசன் சார்பில் வழக்கறிஞர் சஞ்சய் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,

தசாவதாரம் படத்தின் கதையை திருடியதாக மனுதாரர் கூறியிருப்பது தவறானது. உள்நோக்கத்துடன் என் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக சினிமா துறையில் பணியாற்றி வருகிறேன். நான் நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளர், இயக்குநர், கதையாசிரியர். என் நடிப்பை பாராட்டி இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.

இது மட்டுமல்லாமல் மாநில அரசின் கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளேன்.

தற்போது தசாவதாரம் படத்தில் நடித்து வருகிறேன். இதை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. டைரக்டர் ரவிக்குமார் இயக்குகிறார். 10 வேடங்களில் நடித்த பல ஆங்கில படங்கள், தமிழ் படங்கள் ஏற்கனவே வந்துள்ளன.

இந்நிலையில் இந்த கதையை நான்தான் உருவாக்கினேன் என்று மனுதாரர் கூறுவது தவறானது. மனுதாரரை நான் பார்த்தது கூட இல்லை. இது எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனது கற்பனையில் உருவானது தான் தசாவதாரம் கதை.

படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் நடந்து வருகிறது. எனக்கு களங்கம் ஏற்படுத்திய மனுதாரர் மீது மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்வேன்.

இந்த புகார் மீது போலீஸார் விசாரணை நடத்தினர். நான் உண்மையை கூறினேன். அவர்களும் ஏற்றுக் கொண்டனர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil