»   »  தசாவதாரத்தின் எட்டவதாரம்

தசாவதாரத்தின் எட்டவதாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலைஞானி கமல்ஹாசன், கலாராணி ஆசின், ஜிலீர் ராணி மல்லிகா ஷெராவத்தின் கூட்டில் உருவாகும் தசாவதாரம் படத்தை எட்டு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

உலகின் கடைக் கோடியில் உள்ள தமிழனும் கூட படு பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது இப்போதைக்கு இரு படங்களைத்தான். ஒன்று சூப்பர் ஸ்டாரின் சிவாஜி. இன்னொன்று பரமக்குடி தமிழன் கமல்ஹாசனின் தசாவதாரம்.

சிவாஜி விருந்துக்கு ரெடியாகி விட்டது. தட்டைப் போட்டு பரிமாற வேண்டியது மட்டுமே பாக்கி. தசாவதாரம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் உப்பு, புளி, மிளகாய் சேர்க்க வேண்டியது இருக்கிறதாம். படம் இந்த ஆண்டு இறுதிக்குத் தள்ளிப் போகும் என்று கூறுகிறார்கள்.

காரணம் கமல் போட்டு வரும் பத்து கெட்டப்களையும் படமாக்க பிடிக்கும் நேரம். கமலுக்கு மேக்கப் போடவே பல மணி நேரம் பிடிப்பதால், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 சீன் மட்டுமே எடுக்க முடிகிறதாம்.

படம் பக்காவாக வர வேண்டும், காட்சிகள் கலக்கலாக இருக்க வேண்டும் என முன்பே கமல், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முடிவு செய்து விட்டதால் நேரம், காலம், செலவு குறித்துக் கவலைப்படாமல் மொள்ளமாக எடுத்து வருகின்றனர்.

இதுவரை படத்தின் செலவு 30 கோடியைத் தொட்டு விட்டதாம். இன்னும் பத்து பெரிய காந்தியை பட்ஜெட் சாப்பிட்டு விடும் என்கிறார்கள்.

இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளாம். மிச்ச சொச்ச காட்சிகளை ஜூன் மாத இறுதிக்குள் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை உள்ளதாம். அதன் பின்னர் கிராபிக்ஸ் உள்ளிட்ட நகாசு வேலைகளை முடிக்க ஓரிரு மாதங்கள் ஆகலாம்.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் படு திருப்தியாகவும், திவ்யமாகவும் வந்துள்ளதாம். அதனால்தான் பட்ஜெட் பற்றிக் கவலையே படாமல் தாள்களை இறக்கி வருகிறாராம் ரவிச்சந்திரன்.

படம் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ரவிச்சந்திரனை ஒரு பயம் கவ்வியுள்ளது. அதாவது தமிழகத்தில் இப்போது தியேட்டர்களில் கட்டணக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. முன்பெல்லாம் புதிய படங்கள் திரையிட்டால், கொஞ்ச நாட்களுக்கு இஷ்டத்திற்கு கட்டணத்தை வைத்துக் கொள்ள அரசு அனுமதித்திருந்தது.

ஆனால் இப்போது அப்படிச் செய்ய முடியாது என்பதால் தமிழில் மட்டும் படத்தை வெளியிட்டால் சரிப்பட்டு வராது. எனவே பல மொழிகளில் படத்தை டப் செய்து வெளியிட்டால்தான் போட்ட முதலை பத்திரமாக எடுக்க முடியும் என கணக்கிட்டுள்ளார் ரவிச்சந்திரன்.

இதையடுத்து தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், போஜ்புரி, பெங்காலி என எட்டு மொழிகளில் வெளியிடவுள்ளனராம்.

எட்டு திக்கும் பட்டையைக் கிளப்பப் போகும் படத்திற்கு எட்டு மொழிகள் என்ன எண்பது மொழிகளில் கூட டப் செய்யலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil