»   »  தசாவதாரம் கமலுக்கே சொந்தம்!

தசாவதாரம் கமலுக்கே சொந்தம்!

Subscribe to Oneindia Tamil

தசாவதாரம் படத்தின் கதை நடிகர் கமல்ஹாசனின் கற்பனையில் உருவானதுதான். எனவே இப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாம்பரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஒரு வழக்குப் போட்டார். அதில், தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது. என்னை உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்வதாகக் கூறி, கதையைத் திருடிக் கொண்டு என்னை ஏமாற்றி விட்டனர் என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு அனுமதித்த நீதிபதி சித்ரா வெங்கட்ராமன், படத்தை திரையிட இடைக்காலத் தடை விதித்தார். பின்னர் வழக்கு நீதிபதி ராமசுப்ரமணியத்திடம் மாற்றப்பட்டது.

அவர் கமல்ஹாசனை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கமல் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தசாவதாரம் எனது கற்பனையில் உதயமானது. நான் கதையைத் திருடவில்லை என்று கூறியிருந்தார் கமல்.

பின்னர் செந்தில்குமார் மற்றும் கமல்ஹாசனை தங்களது கதைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இரு தரப்பும் கதையை தாக்கல் செய்தனர்.

இந்த இரு கதைகளையும் பரிசீலித்துப் பார்த்த நீதிபதி இன்று இறுதித் தீர்ப்பு வழங்கினார். அதில், இரு கதைகளும் வேறு வேறாக உள்ளன. எனவே தசாவதாரம் படத்தின் கதை கமலுக்கே சொந்தமானது என தீர்ப்பளிக்கப்படுகிறது. படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையும் நீக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

இதன் மூலம் தசாவதாரம் படத்தை திரையிட ஏற்பட்ட முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil