»   »  கட்டப் பஞ்சாயத்து சதி-கமல் பகீர்

கட்டப் பஞ்சாயத்து சதி-கமல் பகீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தசாவதாரம் பட பிரச்சனையில் தன்னை வீழ்த்த கட்ட பஞ்சாயத்து நடத்த முயற்சி நடந்தாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தசாவதாரம் கதை தன்னுடையது என்று கூறி ஒரு திரைக்கதை எழுத்தாளர் வழக்குப் போட்டார். அந்த வழக்கில் கமலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இந் நிலையில் கமல் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:யாகாவராயினும்,

சத்தியமேவ ஜெயதே எனும் கூற்றுக்கு குந்தகம் விளையும் நிலை வரும்போது சட்டம் ஏவ ஜெயதே எனும் புதுமொழியை நம்ப வேண்டி வருகிறது.

அவ்வாறே நம்பி உண்மை அடிபடாமலிருக்க சட்டத்திடம் உதவி கேட்டேன். சட்டம் என்னையும், தன்னையும் காத்து நின்றது.

மனச்சாட்சிக்கு பணிந்து வாழும் கலைஞர்கள்களை வாழ்த்த உள்ள கூட்டத்திற்கு மத்தியில் வீழ்த்தவும் நினைக்கும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் இருப்பது என் மனதை உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

அதுவும் திரை உலகத்தை சார்ந்த சில பழைய நண்பர்களே இந்த அவதூறு வழக்கிற்குப் பின்னால் இருந்திருக்கக் கூடும் என்ற என் சந்தேகம் வலுத்தது.

சந்தேகம் மெய்ப்படும் சில ஆதாரங்களும் கிடைத்துள்ளது. முக்கியமாக தசாவதாரம் தயாரிப்பாளரிடம் சில மாதங்களுக்கு முன் ஒரு திரை எழுத்தாளர் வந்து உங்களுக்கு எதிரா கேஸ் குடுத்தானே பையன். அவன் நம்ம ஆளுதான்,

கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி சமரசம் செஞ்சி வைக்கணும்னா நம்மகிட்ட சொல்லுங்க,நம்ம சாதிக்கார பையன்தான் என்று சொன்னதாய் ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்னிடமும், கே.எஸ். ரவிகுமாரிடமும் சொன்னதும் நான் அதிர்ந்து போனேன்.

நல்லவேளையாக அத்தகைய கட்டப் பஞ்சாயத்தில் எல்லாம் சம்பந்தப் படாமல் சட்டப்படி எங்கள் தரப்பு உண்மையை நாங்கள் காத்துக் கொள்ள முடிவெடுத்து எங்கள் புத்திசாலிதனம் மட்டும் அல்ல நேர்மையும் கூட.

சட்டத்தின் உதவியுடன் உண்மை வென்றே தீரும் என்பதற்கு இன்னும் ஓர் உதாரணம் காட்டிய நீதி மன்றத்திற்கும் மாண்புமிகு நீதிபதிக்கும் எங்கள் வணக்கங்கள்.

சட்டம் தன் வேலையைச் செய்யும், நல்ல தீர்ப்பளிக்கும் என்ற மாறாத நம்பிக்கையுடன் - கமல்ஹாசன்

இவ்வாறு தனது அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil