For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கமலுக்கு மறுபடியும் சோதனை

  By Staff
  |

  கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்கு மீண்டும் ஒரு சோதனை வந்துள்ளது.

  கடும் உழைப்பு, தொழில் அக்கறை, பர்பக்ஷனுக்குப் பெயர் போனவர் கலைஞானி கமல்ஹாசன். இன்று நடித்துக் கொண்டிருக்கும் இளம் நடிகர்களின் வயதை விட கமல்ஹாசனின் திரையுலக அனுபவம் பெரியது.

  நல்ல சினிமாக்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பவர் கமல். சீரியஸாக அதை செய்தும் கொண்டுள்ளார். ராக்கெட் குறித்த விழிப்புணர்ச்சி தமிழகத்தில் பரவியிராத காலத்தில் விக்ரம் படத்தைக் கொடுத்தார்.

  ஆளவந்தான் என்ற பிரமிப்புப் படத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். இப்போது தசாவதாரம் என்ற படு வித்தியாசமான படத்தில் நடித்து வருகிறார்.

  இந்திய திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத அளவுக்கு 10 வேடங்களில் நடித்து வருகிறார் கமல். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இப்படத்தைத் தயாரிக்கிறார். வெற்றிப் பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்கி வருகிறார்.

  இப்படத்திற்காக இதுவரை ரூ. 48 கோடி வரை செலவிட்டுள்ளார்களாம். படம் முடியும் தருவாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதி படத்தைத் திரையிட உத்தேசித்துள்ளனர்.

  படம் ஆரம்பித்தபோது, செந்தில்குமார் என்கிற உதவி இயக்குநர், தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது என்று கூறி வழக்குப் போட்டார். கமல் தனது கதையைத் திருடி விட்டதாக குற்றம் சாட்டினார் செந்தில்குமார்.

  ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், கதை கமலுடையதுதான் என்று தீர்ப்பளித்து செந்தில்குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

  தீர்ப்பை வரவேற்று அறிக்கை விட்ட கமல், தனக்கு எதிராக பெரும் சதி நடப்பதாகவும், திரையுலகைச் சேர்ந்த ஒரு பிரபல கதாசிரியர்தான் இதற்குக் காரணம் என்றும் கூறி பரபரப்பைக் கூட்டினார்.

  இந்த நிலையில் மீண்டும் செந்தில்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். செந்தில்குமார் தாக்கல் செய்துள்ள புதியமனுவில்,தசாவதாரம் எனது கதை என்பதற்கு என்னிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன.

  கடந்த முறை சரியாக விசாரிக்காமல் எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. ஆனால் தசாவதாரம் கதை என்னுடையதுதான் என்பதற்குத் தேவையான ஆதாரங்கள் என்னிடம் இன்னும் உள்ளன. அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் தயாராக உள்ளேன்.

  எனவே படத்தை திரையிடுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் அதைப் போட்டுக் காட்ட தசாவதாரம் படக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும். அப்போது எனது கதைக்கும், படத்தின் கதைக்கும் வித்தியாசம் இருந்தால் எனது மனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் செந்தில்குமார்.

  இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுதாரரும், தசாவதாரம் படக் குழுவும் தங்களது கதையைஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.

  இந்தப் புதிய வழக்கு குறித்து செந்தில்குமார் கூறுகையில், நீதிமன்றத்தின் மூலம் படத்திற்குத் தடை வாங்கப் போவதை முன்கூட்டியே உணர்ந்து விட்ட கமல்ஹாசனும், தயாரிப்பாளரும் ஆளுங்கட்சிக்குச் சொந்தமான கலைஞர் டிவிக்கு தசாவதாரத்தை வி்ற்று விட்டனர்.

  இதன் மூலம் என்னை மிரட்டப் பார்க்கின்றனர். ஆனால் எனது முயற்சிகளை நான் கைவிட மாட்டேன். இறுதித் தீர்ப்பு எனக்கு சாதகமாக இருக்கும் என்றார்.

  கமல் தரப்பில் இதுகுறித்து கருத்து கேட்க முயன்றபோது அவர் கிடைக்கவில்லை. ஆனால் கமல்ஹாசனின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, இதுகுறித்து கமல் இப்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

  படம் வருவதற்குள் இன்னும் எத்தனை அவதாரங்களை கமல் சந்திக்க வேண்டியிருக்குமோ!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X