»   »  பால்கியுடன் இணையும் கமல்

பால்கியுடன் இணையும் கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் சீனிகும் படத்தின் இயக்குநர் பால்கி என்கிற பாலகிருஷ்ணனுடன் இணைகிறார் கலைஞானி கமல்ஹாசன்.

திறமையும், திறமையாளர்களும் எங்கிருந்தாலும் வளைத்துப் போட்டு விடும் கலையில் திறமையானவர் கமல்ஹாசன். புத்தம் புதிய திறமைகளை உடனுக்குடன் தனது படங்களில் புகுத்தி பரீட்சித்துப் பார்ப்பதில் அலாதிப் பிரியம் கொண்டவர் கமல்.

தசாவதாரம் படத்தில் இந்தி இசைப் புயல் ஹிமேஷ் ரேஷ்மய்யாவை இசையமைக்க வைத்துள்ளார் கமல். அந்த வரிசையில் தற்போது இன்னொரு பாலிவுட் திறமையாளருடன் இணையவுள்ளார் கமல்.

சமீபத்தில் இந்தியில் வெளியான படம் சீனிகும். இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகியுள்ள சீனிகும், இந்தி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து விட்டது.

இப்படத்தை இயக்கியிருப்பவர் பால்கி. அவரது பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும், கோலிவுட்டில் தனது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் சிரமத்தை சந்தித்தார். இதையடுத்து பாலிவுட்டுக்குப் போய் அங்கிருந்து தனது திறமையை வெற்றிகரமாக நிரூபித்துள்ளார் பால்கி.

சீனிகும் படத்தின் வெற்றியால் ஈர்க்கப்பட்ட ஷாருக் கான், அபிஷேக் பச்சன் ஆகியோர் தங்களை வைத்து படம் இயக்குமாறு பால்கியிடம் கோரிக்கை வைத்துள்ளனராம்.

இந்த நிலையில்தான் பால்கியை கமல்ஹாசனும் அணுகியுள்ளார். கடந்த வாரம் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு பால்கியை வரவழைத்த கமல், அவரிடம் நீண்ட நேரம் விவாதித்தார். பால்கியின் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறிய கமல், தமிழ் மற்றும் இந்தியில் புதிய படம் ஒன்றை இயக்குமாறும் கேட்டுக் கொண்டாராம்.

இந்தப் படத்திற்கு கமல் மற்றும் பால்கியின் மனம் கவர்ந்த இசைஞானி இளையராஜாதான் இசையமைக்கவுள்ளார்.

தசாவதாரம் முடிந்த பின்னர் கமல், பால்கி இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil