»   »  கமல் அட்வைஸ் - சிம்பு டென்ஷன்!

கமல் அட்வைஸ் - சிம்பு டென்ஷன்!

Subscribe to Oneindia Tamil

அடுத்தவர்களின் ஸ்டைலை காப்பியடிக்காமல் நடிக்க இளம் நடிகர்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் அட்வைஸ் செய்துள்ளார். ஆனால் நான் காப்பி அடித்து நடிக்கவில்லை என்று அதே நிகழ்ச்சியில் சிம்பு விளக்கம் அளித்தார்.

எஸ்.வி.சேகரின் மகன் அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் படம் வேகம். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடந்தது. கமல்ஹாசன் கலந்து கொண்டு ஆடியோ கேசட்டுகளை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், இளம் நடிகர்கள், புதுமுக நடிகர்கள் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும், தங்களுக்கென புதிய ஸ்டைலை உருவாக்க வேண்டும். புதிய திறமைகளை புகுத்த வேண்டும். அதை விடுத்து ஏற்கனவே உள்ள ஸ்டைல்களை காப்பியடிக்க முயலக் கூடாது.

ரஜினிகாந்த் மற்றும் எனக்கு கே.பாலச்சந்தர் போன்ற நல்ல குருக்கள் கிடைத்தனர். இது எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். ஆனால் இப்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இல்லை.

இதனால், எங்களைப் பார்த்து, எங்களிடமிருந்து கற்றுக் கொண்டு அதைக் கொண்டு நடிக்கிறார்கள். அப்படி இல்லாமல், தங்களுக்கென சுயமான ஸ்டைலை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எங்களைப் போல நடிக்க முயலக் கூடாது.

எஸ்.வி.சேகருக்கும், எனக்கும் நீண்ட கால நட்பு உண்டு. அவரது மகனுக்கும் இப்போது திரையுலகில் ஒரு அங்கீகாரம், இடம் கிடைத்துள்ளதாக நான் கருதுகிறேன் என்றார்.

காப்பி அடிக்கக் கூடாது என்று கமல்ஹாசன் பேசியது, மற்றவர்களுக்கு எப்படித் தெரிந்ததோ தெரியவில்லை. ஆனால் சிம்புவுக்கு கொஞ்சம் போல உறுத்தியிருக்கும் போலும்.

காரணம், இவரது ஆரம்ப காலப் படங்களில் கையில் உள்ள பத்து விரல்களையும் வைத்து பல்வேறு வித்தைகளைக் காட்டியவர் சிம்பு. இதற்கு ரஜினி ரசிகர்களிடமிருந்து குண்டக்க மண்டக்க ஆட்சேபனையும், எதிர்ப்பும் வந்ததால் விரலை சற்றே அடக்கி நடிக்க ஆரம்பித்தார் சிம்பு.

இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சு சிம்புவை உசுப்பேத்தி விட்டு விட்டது போலும். கமல் பேச்சுக்கு மேடையிலேயே பதில் அளித்துப் பேசினார் சிம்பு. அவர் கூறுகையில், எனது ஸ்டைல் குறித்து பலரும் விமர்சித்தனர். ஆனால் எனது ஸ்டைல் ரசிகர்களை எட்டியுள்ளது. அது எனக்கு சந்தோஷமாக உள்ளது.

நான் யாரையும் பார்த்து காப்பி அடித்து நடிக்கவில்லை. அது தானாகவே வருகிறது. இது மக்களை கவர்ந்துள்ளது என்பதில் எனக்கு சந்தோஷம்தான். விரல் வித்தைகளைக் காட்டி நடிப்பதில் என்ன தவறு என்றார் சிம்பு.

கமலின் பேச்சும், சிம்புவின் பதிலடியும் வேகம் நிகழ்ச்சிக்கு சூட்டைக் கூட்டியது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil