twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிடைத்ததைச் சுருட்டுபவன் நானல்ல... டிடிஎச் வெளியீட்டால் குடிமுழுகிப் போகாது...! - கமல் அதிரடி

    By Shankar
    |

    சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளுக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Kamal

    கமல்ஹாசனின் காட்டமான 3 பக்க அறிக்கை

    புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்...அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.

    ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் 'புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்' என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.

    ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் - பெரும்பான்மை - 'இது சினிமாவர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்...உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி' என்று என்னைப் பாராட்டுகிறது.

    இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஒரு சிறுபான்மை மட்டும் இதுநாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.

    இந்த DTH என்பதுஎன்ன?

    எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியாஎன்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.

    சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH.

    இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடப்பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளப்புகிறார்கள்.

    கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று.

    என்படம்முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.

    முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத் தயாரிப்பாளர்கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

    ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக முதல் இடத்திற்குவிஸ்வரூம் வரும் என்கிறது வியாபார வட்டாரம்.

    இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?

    DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தி யேகக்காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒருமுறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.

    விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத் தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல்காட்டுவதற்கு மட்டும் அல்ல.

    DTH வசதி தமிழக ஜனத் தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.

    7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரிகொண்டுபோவதைத்தடுப்பதற்குசிறுமுயற்சிகளேசெய்கிறார்கள். கள்ள DVDக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.

    திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்றுகூட சேரக் கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.

    இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம்கெடும் என்று எதிர்த்துத்தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது.

    பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள ஒருபக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை.

    கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும் வீட்டில் மின்விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன்குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?

    முஸ்லீம்களுக்கு எதிரானதா?

    முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டாஅண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.

    அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள் எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச்செய்யுங்கள். அப்பெரு விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

    -இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.

    English summary
    In his statement on Viswaroopam DTH release and Muslim's protest, Kamal Hassan says that there is nothing wrong against the industry in releasing through DTH. He also clarified that the film is not an anti islamic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X