For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தேவர் மகன் முதல் விஸ்வரூபம் வரை... கமல்ஹாசனின் சர்ச்சைப் பயணம்!

  By Sudha
  |

  சென்னை: கமல்ஹாசன் என்றால் சாதனை, புதுமை என்பது போக சர்ச்சையும் கூடவே ஒட்டிப் பிறந்ததாகும். அவரது முதல் படமான களத்தூர் கண்ணம்மாவிலேயே சர்ச்சை இருந்தது என்பதுதான் இங்கு சுவாரஸ்யமான விஷயம்.

  சினிமாவுக்காக, சினிமாவை நம்பி மட்டுமே இருப்பவர் என்றால் நிச்சயம் அது கமல்ஹாசனாக மட்டுமே இருக்க முடியும். இவர் ஒருவர்தான் சினிமாவுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பவர். வேறு எந்த வேலையிலும் ஈடுபடாத ஒரு மனிதரும் இவர்தான். ஆனால் இவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகளும் கூடி நின்று கும்மியடிப்பதுதான் வினோதமாக இருக்கிறது.

  கமல்ஹாசன் சர்ச்சைகளைத் தேடிப் போவதும், சர்ச்சைகள் இவரைத் தேடி வருவதும் கிட்டத்தட்ட இவரது முதல் படமான களத்தூர் கண்ணம்மாவிலேயே தொடங்கி விட்டது என்று கூறலாம்.

  முதல் விருதிலேயே சர்ச்சை

  முதல் விருதிலேயே சர்ச்சை

  கமல்ஹாசன் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இப்படத்துக்காக தேசிய விருதும் பெற்றார். ஆனால் அப்போது வேறு ஒரு சிறுமி நட்சத்திரம்தான் விருது பெறுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கமல்ஹாசன் தனது அட்டகாசமான நடிப்பு மற்றும் முக பாவனையால் விருதைத் தட்டிச் சென்று விட்டார். அப்போது கமல்ஹாசனுக்கு விருது கிடைத்தது பரபரப்பாக பேசப்பட்டதாம்.

  தேவர் மகனில் முதல் பெரிய சர்ச்சை

  தேவர் மகனில் முதல் பெரிய சர்ச்சை

  தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் முதல் பெரிய சர்ச்சையைச் சந்தித்தார். அதில் சாதி வன்முறையை அவர் சித்தரித்த விதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் அதை இலகுவாக சமாளித்திருந்தார் கமல்ஹாசன். படம் மிகப் பெரிய ஹிட்டானது. கமல்ஹாசன் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படங்களில் ஒன்றாக தேவர் மகனும் உள்ளது.

  ஹே ராம்

  ஹே ராம்

  ஹே ராம் படமும் சர்ச்சையில் சிக்கியது. இப்படத்தில் இஸ்லாமியர்களை தேசத் துரோகிகள் போல காட்டியுள்ளார் கமல்ஹாசன் என்று படம் வருவதற்கு முன்பே சர்ச்சை வெடித்தது. அதேபோல மகாத்மா காந்தியையும் அவர் மரியாதைக்குறைவாக சித்தரித்துள்ளார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த சர்ச்சைகளால் படம் வெளிவருவதில் சிக்கல் ஏதும் இல்லை. வந்த பிறகும் கூட சர்ச்சை பெரிதாகவில்லை.

  விருமாண்டியான சண்டியர்

  விருமாண்டியான சண்டியர்

  சண்டியர் என்ற பெயரில் தொடங்கிய படம் பெருத்த எதிர்ப்பில் சிக்கியது. தலித் மக்களுக்கு எதிரான படம் இது. தென் மாவட்டங்களில் ஆயுதக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையிலான படம் என்று தலித் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி போர்க்கொடி உயர்த்தினார். படப்பிடிப்பையும் நடத்த விட மாட்டோம் என்று அவர் அறிவித்தார். இதையடுத்து படத்தின் பெயரை சண்டியர் என்பதிலிரு்நது விருமாண்டி என மாற்றினார் கமல். சென்னையில் வைத்து கிராமக் காட்சிகளை செட் போட்டு எடுத்து வெளியிட்டார். படம் சூப்பர் ஹிட் ஆனது.

  டாக்டர்களின் எதிர்ப்பை சந்தித்த வசூல் ராஜா

  டாக்டர்களின் எதிர்ப்பை சந்தித்த வசூல் ராஜா

  அடுத்து வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். இந்தியில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக் இது. இப்படத்தின் தலைப்பு டாக்டர்களை மோசமானவர்களாக சித்தரிப்பதாக உள்ளதாக கூறி மருத்துவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். வழக்கும் போடப்பட்டது. இருப்பினும் தலைப்புக்கு ஆட்சேபனை இல்லை என்று கோர்ட் தீர்ப்பளிக்கவே அதே பெயரிலேயே படம் வெளியாகி ஹிட் ஆனது.

  மும்பை எக்ஸ்பிரஸ்

  மும்பை எக்ஸ்பிரஸ்

  எதிர்பாராத வகையில் டாக்டர் ராமதாஸும், தொல் திருமாவளவனும் இந்தப் படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தின் தலைப்பு முற்றிலும் ஆங்கிலத்தில் இருப்பதாக அவர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால் ஜெயா டிவிக்கு இப்படத்தை விற்ற கமல்ஹாசன், அதே பெயரிலேயே படத்தையும் ரிலீஸ் செய்தார்.

  தசாவதாரம்

  தசாவதாரம்

  விஸ்வரூபம் படத்தைப் போலவே ஆரம்பம் முதல் பல்வேறு சோதனைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்த படம்தான் தசாவதாரம். படம் வருமா, வந்துருமா என்ற ரீதியில் கிண்டலடித்துப் பலரும் பேசும் அளவுக்கு நிலைமை போனது. ஆனால் கமல்ஹாசன் படங்களிலேயே வசூலில் சாதனை படைத்த படம் தசாவதாரம். இப்படத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையிலான மோதல் தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. ஆனாலும் அது பெரிதாகவில்லை.

  மன்மதன் அம்பு

  மன்மதன் அம்பு

  மன்மதன் அம்பு படத்தில் கண்ணோடு கண்ணைக் கலந்தாய் என்ற பாடலுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்தப் பாடலையே படத்திலிருந்து எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் கமல்.

  உன்னைப் போல் ஒருவன்

  உன்னைப் போல் ஒருவன்

  உன்னைப் போல் ஒருவன் படத்திலும் கமல்ஹாசன் இஸ்லாமியர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இப்போது கமல்ஹாசனின் சர்ச்சைகள் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன அவரது விஸ்வரூபம் படம் மூலம். முந்தைய சர்ச்சைகளை வெற்றிகரமாக கடந்ததைப் போல இந்த சர்ச்சையிலிருந்தும் மீள்வாரா உலக நாயகன் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

  English summary
  Controversies are not new to 'Ulaganayagan' Kamal Hassan. From Thevar Magan, he is facing and meeting so many issues and has sorted out successfully. Here is a round up on his movies and controversies.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X