சிவகுமாரண்ணே, 84 மார்க் போதாது… நூறுதான் நல்ல மார்க்.. கமல்ஹாசனின் ட்விஸ்ட்டான பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை: பழம்பெரும் நடிகரும் பேச்சாளருமான சிவகுமார் இன்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவுக்கு சூர்யா, கார்த்தி என இரு பெரும் நடிகர்களை கொடுத்த சிவகுமார், அந்த காலத்திலேயே எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்தியவர்.
முருகனாகவும், பெருமாளாகவும் நடித்து அழகுக்கே இலக்கணமாக திகழ்ந்தவர் தான் சிவகுமார். அவரது பிறந்தநாளை தமிழ் சினிமா பெரிதாக கொண்டாடவில்லை என்றாலும், கமல்ஹாசன் மறக்காமல் இப்படியொரு ட்வீட் போட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அஜித், விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வந்த சிவகுமார் ஒரு கட்டத்தில் இதற்கு மேல் சினிமா வேண்டாம் என ஒதுங்கி பேச்சாளராகவும் மாறியது குறிப்பிடத்தக்கது.
சிவகுமார் பிறந்தநாள்: 1941ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி கோயம்பத்தூர் அருகே உள்ள சூலூரில் பிறந்த சிவகுமார் ஓவியக்கலையில் இருந்த ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்தார். பழனிச்சாமி எனும் தனது பெயரை சினிமாவுக்கு வந்த பிறகு சிவகுமார் என மாற்றிக் கொண்டார். 1965ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் இவர் அறிமுகமானார். சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, காவல்காரன், கண் கண்ட தெய்வம், திருமால் பெருமை, திருமலை தென்குமரி, அகத்தியர் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். முருகனாகவும், பெருமாளாகவும் அந்த காலத்தில் வேடமணிய இவரை தவிர கச்சிதமான ஆள் இல்லை என்றே சொல்லலாம்.
84 பத்தாது 100ஐ தொடணும்: 1973ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிவகுமார் இணைந்து நடித்திருந்தனர். அன்று முதல் இன்று வரை இருவரும் அண்ணன் தம்பிகளாகவே பழகி வருகின்றனர். "சிவகுமாரண்ணே, 84 மார்க் போதாது... நூறுதான் நல்ல மார்க்!" என தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் என கொண்டாடப்படும் சிவகுமாருக்கு கமல்ஹாசன் தனது பாணியில் ட்விஸ்ட் வைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூர்யா, கார்த்தி ஹேப்பி: தமிழ் சினிமாவில் இரண்டு நல்ல பசங்கள நடிகர்களாக கொடுத்தவர் சிவகுமார் என ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். ஒழுக்கத்தை பற்றி மாணவர்கள் மத்தியில் மட்டும் பேசாமல் தனது மகன்களுக்கும் சிவகுமார் சொல்லிக் கொடுத்துள்ளார் என்று பாராட்டி வருகின்றனர். அப்பா சிவகுமாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே சந்தோஷத்தில் இருப்பதாக கூறுகின்றனர். கமல்ஹாசனின் வாழ்த்து இன்னமும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











