twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜனவரி 28ம் தேதி வரை விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது- உயர்நீதிமன்றம்

    By Sudha
    |

    சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை நீக்கி உத்தரவிடக் கோரி படத்தின் இயக்குநரும், ஹீரோவுமான கமல்ஹாசன் போட்டுள்ள வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 28ம் தேதி வரை தடை நீடிக்கும் என இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

    இதனால் திட்டமிட்டபடி விஸ்வரூபம் நாளை தமிழகத்தில் திரையிடப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவை அறிவித்துள்ளன.

    இதையடுத்து தமிழக அரசு 2 வார காலத்திற்கு இப்படத்தை திரையிடுவதற்குத் தடை விதித்துள்ளது.

    இதை எதிர்த்து தற்போது நடிகர் கமல்ஹாசன் சட்டத்தின் உதவியை நாடியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய தணிக்கைக் குழு அனுமதி தந்த பிறகும் தடை விதிப்பது சட்ட விரோதம் என கூறியுள்ளார். மேலும் இதை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசனின் வக்கீல்களுக்கும், அரசு வக்கீலுக்கும் இடையே காரசாரமான வாதம் நடந்தது.

    தடை செய்யும் அளவுக்கு இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளோ அல்லது வசனங்களோ ஏதாவது இருக்கிறதா என்று கமல்ஹாசனின் வக்கீல்கள் கேட்டபோது அதற்கு அரசுத்தரப்பில் சரியான பதில் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து தொடர்ந்து வாதிட்ட கமல்ஹாசனின் வக்கீல்கள், மலேசியாவிலும், கத்தாரிலும் இப்படத்திற்கு எந்த ஆட்சேபனையும் வரவில்லை. தடை செய்யப்படவும் இல்லை. இந்த நாடுகளில் இப்படம் திட்டமிட்டபடி திரைக்கு வந்து விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் இதைத் தடை செய்துள்ளனர் என்று வாதிட்டனர்.

    இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி, படத்தை ஜனவரி 28ம் தேதிக்கு தள்ளி வைக்க முடியுமா என்று கமல்ஹாசன் தரப்பு வக்கீல்களைப் பார்த்து கேட்டார். அதற்கு கமல்ஹாசன் தரப்பில் கூறுகையில், திட்டமிட்டபடி ஜனவரி 25ம் தேதி படத்தை திரையிடாவிட்டால் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி வெங்கட்ராமன், இந்தப் படத்தை நான் 26ம் தேதி பார்க்கிறேன். அதன் பிறகு இப்படத்தை திரையிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா, வேண்டாமா என்ற முடிவுக்கு வரலாம். எனவே ஜனவரி 28ம் தேதி வரை படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று அறிவித்தார்.

    நாளை ரிலீஸ் இல்லை

    உயர்நீதிமன்றம் 28ம் தேதி வரை தடை தொடரும் என அறிவித்து விட்டதால் விஸ்வரூபம் நாளை திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கமல்ஹாசன் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    Actor-Director Kamal Hassan has approached Madras HC to remove Viswaroopam ban, slapped by TN govt.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X