»   »  வித விதமான ஹீரோயின்கள்!

வித விதமான ஹீரோயின்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


எனது ஒவ்வொரு படத்திலும் ஒரு ஹீரோயின் இடம் பெறுவார். இதன் மூலம் படத்திற்கும், ரசிகர்களுக்கும் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்கிறார் கரண்.


குழந்தைப் பருவம் முதல் நடித்து வருபவர் கரண். ரகு என்ற பெயரில் மலையாளத்தில் சிறு வயதில் நடிக்க வந்த கரண், தமிழில் நம்மவர் மூலம் வித்தியாசமான நடிகராக கமல்ஹாசனால் அடையாளம் காட்டப்பட்டவர்.

அதன் பின்னர் வில்லனாக, நாயகனுக்கு தோழனாக, குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து முடித்தார் கரண். இடையில் ஹீரோ ஆசை வரவே கேரக்டர் ரோல்களிலும், வில்லனாகவும் நடிக்க மறுத்து ஹீரோ வாய்ப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

காத்திருப்பு நீண்டதாக இருந்தாலும் கூட அவர் எதிர்பார்த்த சரியான வாய்ப்பு கொக்கி மூலம் வந்தது. கொக்கி சூப்பர் ஹிட் ஆனதால், ஹீரோவாகவும் கரணின் திரையுலக வாழ்க்கை வெற்றி பெற்றது.

கொக்கியைத் தொடர்ந்து வெளியான கருப்பசாமி குத்தகைதாரர் படம் கரணை ஸ்டார் ஹீரோவாக மாற்றியது. இதையடுத்து வெளியான தீ நகர் படமும் வெற்றிப் பட வரிசையில் இணைந்தது.

தற்போது கரண் ஹீரோவாக நடிக்கும் நான்காவது படமாக காத்தவராயன் உருவாகப் போகிறது. முதலில் இப்படத்தில் நடிப்பதாக இருந்தவர் சிபிராஜ். ஆனால் கடைசியில் அவர் ஜகா வாங்கிக் கொள்ள காத்தவராயன் கரணைத் தேடி வந்தது.

இப்படத்தில் கள்ளச்சாராய வியாபாரியாக வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார் கரண். அவருக்கு ஜோடி போடுபவர் தெலுங்கிலும், கன்னடத்திலும் பிசியாக உள்ள விதிஷா. அவருக்கு இதுதான் தமிழில் முதல் படம்.

தனது காத்தவராயன் குறித்து கரண் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய படம். கள்ளச்சாராய வியாபாரியாக இதில் நடிக்கிறேன். இதற்காக நான் தயங்கவில்லை, பயப்படவில்லை.

நான் ஒரு நடிகர். எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன். இந்தப் படத்தின் கதை வித்தியாசமானது. எந்த நடிகருக்கும் இது பொருந்தும்.

மலையூர் மம்பட்டியான் படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற சேலம் மற்றும் ஓகனேக்கல் மலைப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தவுள்ளோம் என்றார்.

இப்படத்தை இயக்கவிருப்பவர் சலங்கை துரை. இவர் தெலுங்கில் டி என்ற படத்தை இயக்கியவர்.

படத்துக்குப் படம் புது ஹீரோயினுடன் நடிப்பது குறித்து கேட்டபோது, எனது படங்களில் நடித்த நடிகையுடன் நான் மீண்டும் நடிப்பதில்லை. முதல் படத்தில் சஞ்சனாவுடன் ஜோடி சேர்ந்தேன். 2வது படமான கருப்பசாமியில் மீனாட்சி எனக்கு ஜோடியாக நடித்தார். 3வது படமான தீநகரில் உதயதாரா எனக்கு ஜோடி. இப்படத்தில் விதிஷா நடிக்கிறார்.

விதிஷாவை ஜோடியாகப் போடலாம் என இயக்குநர்தான் யோசனை தெரிவித்தார். இப்படி புதுப் புது ஹீரோயினுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதால் படத்திற்கு ஒரு வித்தியாசம் கிடைக்கிறது. ரசிகர்களுக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றார் கரண்.

கரணின் அடுத்த படத்திலும் கூட புதுமுக நடிகைதான் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம்.

புதுமுகமாக இருந்தால் பாதுகாப்பு, செளகரியம் என்று கரண் நினைக்கிறார் போல!

Read more about: karan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil